கோஃபி அன்னான் காலமானார்

ஐ.நா-வின் முன்னாள் பொதுச்செயலாளர் கோஃபி அன்னான் காலமானார்

by Bella Dalima 18-08-2018 | 3:52 PM
நோபல் பரிசு பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலாளர் கோஃபி அன்னான் காலமானார். ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலாளராக 10 ஆண்டுகள் பதவி வகித்த கோஃபி அன்னான் தனது 80 ஆவது வயதில் சுவிட்சர்லாந்தில் இன்று உயிரிழந்தார். ஐக்கிய நாடுகள் சபையின் 7 ஆவது செயலாளராக பதவி வகித்தவர் கோஃபி அன்னான். 1938 ஆண்டு கானாவில் பிறந்த அவர், 1997 ஆம் ஆண்டில் ஐ.நா-வின் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 2006 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். "ஒரு சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அமைதியான உலகத்திற்காக உழைத்ததற்காக" கோஃபி அன்னான் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு கூட்டாக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. பதவி ஓய்விற்குப் பின்னர் 2012 ஆம் ஆண்டு வரை சிரியாவிற்கான ஐ.நா. அரபு லீக் கூட்டுச் சிறப்பு பிரதிநிதியாக செயற்பட்டார். சுவிட்சர்லாந்தில் தங்கியிருந்த கோஃபி அன்னான் உடல்நலக்குறைவால் இன்று மரணம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.