வாஜ்பாயின் இறுதிக்கிரியை: கிரியெல்ல இந்தியா பயணம்

வாஜ்பாயின் இறுதிக்கிரியை நிகழ்வுகளில் கலந்துகொள்கிறார் லக்ஷ்மன் கிரியெல்ல

by Bella Dalima 17-08-2018 | 3:46 PM
Colombo (News 1st)  இந்தியாவின் முன்னாள் பிரதமர் காலஞ்சென்ற அட்டல் பிஹாரி வாஜ்பாயின் இறுதிக்கிரியை நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று அதிகாலை இந்தியாவிற்கு பயணமானார். இலங்கை அரசின் சார்பில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல முன்னாள் பிரதமருக்கு இறுதி அஞ்சலி செலுத்தவுள்ளார். இதேவேளை, இந்தியா தனது மிகச்சிறந்த அரசியல் தலைவர்களில் ஒருவரை இழந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தனது இரங்கல் செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வாஜ்பாய் மிக சிறந்த தலைவர் மட்டுமல்லாது அவரது தொலைநோக்கு தலைமைத்துவத்தின் கீழ் இந்தியா அநேக சாதனைகளை நிலைநாட்ட வழிவகுத்தவர் என இரா.சம்பந்தன் தனது இரங்கல் செய்தியில் மேலும் கூறியுள்ளார். முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இழப்பால் துயரத்தில் ஆழ்ந்துள்ள இந்திய மக்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இலங்கை தமிழ் மக்கள் சார்பில் தமது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் காலஞ்சென்ற அட்டல் பிஹாரி வாஜ்பாயின் இறுதிக்கிரியைகள் இன்று டெல்லியில் இடம்பெறவுள்ளன. சிறுநீரகத்தொற்று மற்றும் சுவாசக்கோளாறு காரணமாக அவர் டெல்லியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் கடந்த ஜூலை 11 ஆம் திகதி அவர் அனுமதிக்கப்பட்டார். கடந்த 40 நாட்களாக அவருக்கு தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (16) தனது 93 ஆவது வயதில் அவர் உயிரிழந்தார்.