நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும்

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும்

by Staff Writer 17-08-2018 | 8:12 PM
Colombo (News 1st)  நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லிமீட்டர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மலையகத்தில் தொடர்ந்தும் சீரற்ற வானிலை நிலவி வருகின்றது. செனன் பகுதியில் இன்று மாலை மீண்டும் மண் சரிவு ஏற்பட்டமையால் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதி மூடப்பட்டுள்ளது. ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் செனன் பகுதில் இன்று காலை மண்மேடு சரிந்து வீழ்ந்ததால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது. இந்நிலையில், மாலை வேளையில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டது. தற்போது ஹட்டன் - கொழும்பு பிரதான வீதி மூடப்பட்டுள்ளதால் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மண்மேட்டை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி பயணிப்போர் வனராஜா சந்தியூடாக காசல்ரீ சென்று அங்கிருந்து நோட்டன் பிரிட்ஜ் ஊடாக ஹட்டன் நகரை சென்றடைய முடியும் என பொலிஸார் கூறினர். மேலும், ஹட்டனுக்கான ஒரு வழிப்பாதையாக ஹட்டன் - கொழும்பு பழைய வீதியை பயன்படுத்த முடியும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டனிலிருந்து வௌியேறும் வாகனங்கள் பத்தன சந்திக்கு சென்று, அங்கிருந்து நாவலப்பிட்டி வீதியூடாக செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மலையகத்தில் நிலவும் பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக களனி ஆறு பெருக்கெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தாழ்நிலப் பகுதிகளில் வாழ்வோரை அவதானத்துடன் செயற்படுமாறு இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கேட்டுக்கொண்டார்.