நல்லாட்சி அரசாங்கம் சாதித்தது என்ன?

நல்லாட்சி அரசாங்கத்தின் மூன்றாண்டு சாதனைகள்

by Staff Writer 17-08-2018 | 9:35 PM
Colombo (News 1st)   ஊழலுக்கு எதிராகப் போராடி, அவற்றினை இல்லாதொழிப்பதாக மக்களுக்கு வாக்குறுதியளித்து அரசாங்கம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி மூன்று வருடங்கள் நிறைவுபெற்றுள்ள போதும் அவை நிறைவேற்றப்படவில்லை. 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் 100 நாள் அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டு, சில வாரங்களுக்குள் அதாவது 2015 பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி முதலாவது முறிகள் மோசடி இடம்பெற்றது. மத்திய வங்கியின் ஆளுநரான மாமா, அவரின் மருமகனுக்கு இலாபத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காக முன்னெடுத்த கொடுக்கல் வாங்கலூடாக அப்போது 700 மில்லியன் ரூபாவுக்கும் அதிக நட்டம் ஏற்பட்டது. 30 வருடங்களாக நாட்டு மக்கள் செலுத்தவேண்டியிருக்கும் இந்த நட்டத்தினை எவ்வாறு கணக்கிடுவது என்பது இதுவரையில் தெரியவில்லை. இவ்வாறான பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளபோதும், மாமனாரைப் பாதுகாக்க பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட்டதுடன், 2016 மார்ச் 29 மற்றும் 31 ஆம் திகதிகளில் மீண்டும் அவ்வாறானதொரு மோசடி இடம்பெற்றது. இந்த இரண்டாவது முறிகள் மோசாடியில் ஒரு தடவையில் சுமார் 700 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதுடன், அதனை பல வருடங்களில் திருப்பி செலுத்த வேண்டியதும் நாட்டு மக்களே. மோசடியில் ஈடுபட்டவர்கள் சிறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய வங்கியின் ஆளுநராக செயற்பட்ட அர்ஜூன மகேந்திரன் காணாமற்போயுள்ளார். அர்ஜூன மகேந்திரனை காணாமல் போகச்செய்தது மாத்திரமல்லாது, அவருடைய தலையீட்டுடன் தற்போது சிங்கப்பூர் வர்த்தக ஒப்பந்தத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்டிய தேசிய விமான சேவையான ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் இலாபம் ஈட்டும் நிறுவனம் என கூறி அதிகாரத்திற்கு வந்த சிலரால், தற்போது அந்நிறுவனம் 28 பில்லியன் ரூபாவிற்கும் அதிக நட்டத்தை அடைந்துள்ளதாக மாற்றிக்கூறப்பட்டுள்ளது. இந்த நட்டத்தை மீள செலுத்த வேண்டியிருப்பதும் நாட்டுக்கு வரி செலுத்தும் சாதாரண மக்களே. பிரதமரின் நண்பரும் அவரின் ஆலோசகருமான சரித்த ரத்வத்தகேவின் சகோதரர் சுரேன் ரத்வத்த பிரத நிறைவேற்றதிகாரியாக நியமிக்கப்பட்டு, மூன்று வருடங்களில் பெற்றுக்கொடுத்த அபிவிருத்தியா இது? தற்போது விமான நிறுவனம் தொடர்பில் எந்தவித அறிவுமற்ற ரஞ்சித் பெர்னாண்டோ என்பவர் ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவிக்கு அவர் நியமிக்கப்படுவதற்கு காணப்பட்ட ஒரே ஒரு தகைமை பிரதமரின் நண்பர் என்பதுவே! பாடசாலை மாணவர்களுக்கு டெப்களை பெற்றுக்கொடுப்பதற்கான செயற்றிட்டத்தை ஆரம்பிப்பதாகக் கூறி, அதற்கான விலை மனு கோரப்பட்டதிலிருந்து ஊழல் இடம்பெற்றுள்ளது. இந்த மோசடியை தடுப்பதற்காக ஜனாதிபதி தலையீடு செய்து, அந்த செயற்றிட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளார். பாடசாலை மாணவர்களுக்கு இலவச காப்புறுதியைப் பெற்றுத்தருவதாகக் கூறி இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல் அண்மைக்காலத்தில் பாரிய சந்தேகத்திற்கிடமான விடயமாகக் காணப்பட்டது. விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுப்பதற்காக பல பில்லியன்களை செலவிட்டு இறக்குமதி செய்த கறவைப் பசுக்கள் எவ்வித பலனும் அளிக்காது இறந்து போன நிலையில், மீண்டும் 15,000 கறவைப் பசுக்களை இறக்குமதி செய்வதற்கு ஆரம்ப நிதி செலுத்தப்பட்டதும் பிரதமரின் செயலாளரின் மனைவி ஓய்வுபெறுவதற்கு ஒரு மாத்திற்கு முன்னர் இந்த செயற்றிட்டத்தை அமுல்படுத்துவதற்கு பணிப்புரை விடுத்துள்ளமையும் தற்போது தெரியவந்துள்ளது. மத்திய அதிவேக வீதியின் நிர்மாணப்பணியின் மூன்றாம் கட்டத்திற்காக ஜப்பானிடமிருந்து 160 பில்லியன் ரூபாவிற்கும் அதிக நிதி - அதிக வட்டியின் கீழ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டில் காணப்படக்கூடிய கொள்கைத் திட்டங்களை வெளிப்படையாக மீறி இந்த நிர்மாணப் பணிக்கான ஒப்பந்தத்தை ஜப்பான் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியுள்ளனர். அதிவேக வீதியின் இரண்டாம் கட்ட நிர்மாணப்பணியை இலங்கையிலுள்ள நிறுவனம் ஒன்றுக்கு அரச வங்கியின் கடனின் கீழ் வழங்கினர். அப்போது கடன் வழங்கிய அரச வங்கி இந்த வீதியின் ஒப்பந்தக்காரருக்கு பில்லியன் கணக்கில் கடன் வழங்கியிருந்தது. பல்வேறு செயற்றிட்டங்களுக்காக இந்த நிறுவனம் 10 பில்லியன் ரூபா கடனை அரச வங்கியிடமிருந்து பெற்றுள்ளது. இந்த கடனைப் பெற்றுக்கொண்ட குறித்த ஒப்பந்த நிறுவனத்தின் நிறைவேற்று உப தலைவர், கடன் வழங்கிய வங்கியின் பணிப்பாளர் சபையின் உறுப்பினராவார். மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வளத்திற்கு முன்னுரிமை வழங்கி பல மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பதாக தெரிவிக்கப்பட்டபோதிலும், கடந்த மூன்று வருடங்களுக்குள் எந்த ஒரு பாரிய மின் உற்பத்தி நிலையங்களும் ஸ்தாபிக்கப்படவில்லை என்பது குறித்து அனைவரும் அவதானத்துடன் உள்ளனர். இதற்குப் பதிலாக பல்வேறு திட்டங்களூடாக தனியார் மின் உற்பத்தி நிலையங்களூடாக மின்சாரக் கடன் பெறுவதற்காக ஒப்பந்தத்தை புதுப்பிப்பதுடன், கெரவலப்பிட்டியவில் 300 மெகாவோட்ஸ் மின்சாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான நிர்மாணத் திட்டமும் சீர்குலைந்துள்ளது. தனியார் மின் உற்பத்தி நிலைங்களுக்கு எவ்வித முறையும் இன்றி வழங்குவதற்கு ஆணையிட்டது இந்த அரசாங்கத்தின் தலைமையே! உலகின் முதற்தர கார் உற்பத்தியாளரான வோக்ஸ் வேகன் நிறுவனத்தின் ஒரு தொழிற்சாலையை குளியாப்பிட்டியவில் ஆரம்பிப்பதாகத் தெரிவிக்கப்பட்டபோதிலும் இறுதியில் நடந்தது என்ன? உள்ளூர் நிறுவனம் ஒன்றின் தொழிற்சாலைக்கு தேவையான வசதிகளை வழங்கியது மாத்திரமே! ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தின் போது துபாயுடன் கொடுக்கல் வாங்கல் இடம்பெறுவதாகத் தெரிவித்து ஆட்சிக்கு வந்ததன் பின்னர் குற்றம்சாட்டியவர்கள் தங்களுடைய வர்த்தக செயற்பாடுகளை குறித்த நபர்களுக்கு விற்பனை செய்ததுடன், ஹொரணையில் பாரிய டயர் தொழிற்சாலையை நிர்மாணிப்பதற்கு வரிச்சலுகையையும் பெற்றுக்கொடுத்தனர். ஜனாதிபதி நாட்டு மக்களுக்காக சிந்தித்து சிறந்த தீர்மானங்களை மேற்கொள்ளும்போது என்ன நிகழ்கின்றது? ஊழல் மோசடியை இல்லாது ஒழிப்பதாகக் கூறி ஆட்சிப்பீடம் ஏறி பாராளுமன்றத்தில் சிறுபான்மை அதிகாரத்தைக் கொண்ட ஒருவருக்கு பிரதமர் பதவியை வழங்கியமை மக்களுக்கு இழைத்த பாரிய அநீதியாகும். மக்களின் ஆணையின்றி அதிகாரத்தைக் கைப்பற்றிய பிரதமர் முதன் முதலில் நிறைவேற்றதிகாரங்களை இரத்து செய்வதற்கு முனைந்தார். 19 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் கீழ் இதனை மேற்கொண்டதுடன், ஊழலுக்கு எதிரான ஊடக அடக்குமுறை தொடர்பான சரத்துக்களும் நீக்கப்பட்டன. திருட்டுக்களை இல்லாது செய்வதாகக் கூறி அதிகாரத்திற்கு வந்ததன் பின்னர் மிகசூட்சுமமான முறையில் திருட்டுக்களுக்கு உதவி ஒத்தாசை வழங்கியதுடன், அது தொடர்பில் அம்பலமாகியதன் பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது கட்சிக்கு பல்வேறு உறுதிகளை வழங்கினார். தலைமைத்துவத்திற்கு சவால் ஏற்பட்டவுடன், தலைமைத்துவக் குழு ஒன்றை நியமித்து அதன் தலைவராக கரு ஜயசூரியை ரணில் விக்ரமசிங்க நியமித்தார். இதனைத் தொடர்ந்து மீண்டும் மீண்டும் சவால்கள் ஏற்பட சரத் பொன்சேகா, ரவி கருணாநாயக்க உள்ளிட்டவர்களை உப தலைவர்களாக நியமித்ததுடன் இறுதியில் தனக்கு நெருங்கிய அகிலவிராஜ் காரியவசத்தை கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கும் நியமித்தார். நண்பர்களுடன் அரசாங்கத்தை நிர்வகிப்பதுடன் தனது கட்சியை தமக்கு நெருங்கியவர்களுடன் நிர்வகிக்கும் இவ்வாறான தலைவர்களை மக்கள் ஒன்று, இரண்டல்ல முப்பது தடவைகள் நிராகரித்தனர். உயர்வாகக் காணப்படும் தலைமைத்துவத்தை மூழ்கடிப்பதற்கு மிக சூட்சுமமான முறையை இவர்கள் கையாள்கின்றனர். சஜித் பிரேமதாசவை விமல் வீரவன்சவைப் பயன்படுத்தி பாராளுமன்றத்தில் விமர்சிப்பதும், சரத் பொன்சேகாவை பயன்படுத்தி விமர்சிப்பதும், ரவி கருணாநாயக்கவின் அரசியல் எதிர்காலத்தை சீர்குலைத்ததும் இதற்கு சிறந்த உதாரணங்களாகும். மைத்திரிபால சிறிசேன, சஜித் பிரேமதாச , நவீன் திசாநாயக்க, கோட்டாபய ராஜபக்ஸ், ஹரீன் பெர்னாண்டோ மாத்திரமல்ல அநுரகுமார திசாநாயக்க போன்ற தலைவர்களுக்கும் ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கான தகைமை காணப்படுவதாகவே மக்கள் நம்புகின்றனர். எனினும், தற்போது மக்களால் நிராகரிக்கப்படுகின்ற போதிலும், பொய்யான வாக்குறுதிகளை வழங்கி தொடர்ந்தும் அதிகாரத்தில் இருக்கின்றனர். இறுதியில் மக்களுக்கு என்ன கூறுகின்றனர்? அதிகாரம் உள்ளவர்களும், அதிகாரத்திலுள்ளவர்களும் ஒரே குழுவினரே!