நட்சத்திர அந்தஸ்துள்ள ஹோட்டலில் தங்கிய அதிகாரிகள்

நட்சத்திர அந்தஸ்துள்ள ஹோட்டலில் தங்கிய கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள்: 90,85,000 செலவு

by Staff Writer 17-08-2018 | 10:49 PM
கடந்த மார்ச் மாதம் இலங்கையில் நடத்தப்பட்ட சுதந்திரக்கிண்ண கிரிக்கெட் தொடரின் போது இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிர்வாக அதிகாரிக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவு தொடர்பான வெளிக்கொணர்வே இது. சுதந்திரக்கிண்ண கிரிக்கெட் தொடரில் நிறைவேற்றுக்குழு, தலைவர், உபதலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தங்குமிடம், உணவு, குடிநீர் விநியோகத்திற்காக நட்சத்திர அந்தஸ்துள்ள ஹோட்டலுக்கு 90 இலட்சத்து 85 ஆயிரத்து 410 ரூபா, 38 சதம் செலுத்தப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் உள்ளடங்கும் மற்றொரு கொடுப்பனவாக பிரதம நிறைவேற்று அதிகாரியான அருண டி சில்வாவுக்காக வழங்கப்பட்ட 4 இலட்சத்து 36 ஆயிரத்து 610 ரூபா 1 சதம் காணப்படுகின்றது. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவருக்கு இவ்வாறு சிறப்புரிமை வழங்க முடியுமா என்பது சந்தேகத்திற்குரிய விடயமாகும். மேல் மாகாணத்தில் வசிக்கும் பிரதம நிறைவேற்று அதிகாரியான அருண டி சில்வா ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற சுதந்திரக்கிண்ண கிரிக்கெட் தொடரின் போட்டிகளுக்காக இவ்வாறு நட்சத்திர அந்தஸ்துள்ள ஹோட்டலில் தங்கியது ஏன்? இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திலிருந்து 10 கிலோ மீட்டருக்கும் குறைவான தூரத்தில் அமைந்துள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற சுதந்திரக்கிண்ணத் தொடரின் 7 போட்டிகளுக்காக நட்சத்திர அந்தஸ்துள்ள ஹோட்டலை ஒதுக்கியது ஏன்? 19 சந்தர்ப்பங்களில் அவர் தங்கும் ஹோட்டல் அறைக்காக மாத்திரம் 4 இலட்சத்து 8 ஆயிரத்து 438 ரூபா 50 சதம் செலுத்தப்பட்டுள்ளது. பிரதம நிர்வாக அதிகாரியின் உடைகளைக் கழுவுவதற்காக செலுத்தப்பட்ட 27 ஆயிரத்து 250 ரூபா 47 சதம் அதில் உள்ளடங்கியுள்ளது. பிரதம நிர்வாக அதிகாரியான அருண டி சில்வாவின் விலைப்பட்டியலில் வாடகை வாகனங்களுக்காக 925 ரூபாவும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபாவும், 150 லிட்டர் எரிபொருளும் வழங்கும் நிலையில், அருண டி சில்வா தனது விலைப்பட்டியலில் வாடகை வாகனத்திற்கான செலவை சேர்த்துள்ளமை வியப்புக்குரிய விடயமாகும். பிரதம நிர்வாக அதிகாரியான அருண டி சில்வாவே தனது ஹோட்டல் விலைப்பட்டியலுக்கான அனுமதியை வழங்கும் அதிகாரியாக உள்ளமை வியப்புக்குரிய மற்றொரு விடயமாகும். இவ்வாறான வசதிகளைப் பெறும் நிர்வாக அதிகாரியான அருண டி சில்வா ஹோட்டல் அறையைப் பயன்படுத்தியதால் செலுத்த வேண்டி ஏற்பட்ட தொகை தொடர்பாக விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த போதிலும், அதற்கு என்ன நடந்ததென வெளிவரவில்லை. விளையாட்டின் மேம்பாட்டிற்காக செயற்பட வேண்டிய அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகள் தங்களின் சொகுசு வாழ்க்கைக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதை அவர்களின் இந்த செயற்பாடுகள் உணர்த்துகின்றன. விளையாட்டுத்துறையின் எதிர்காலத்திற்காக தமது தொழிற்சார் நன்மதிப்பை பாதுகாத்துக்கொள்ளக்கூடிய உண்மையான தொழிலாளர்களும், நிர்வாகிகளும் விளையாட்டுத்துறைக்கு நியமிக்கப்படும் வரை இதுபோன்ற செயற்பாடுகளை தடுத்து நிறுத்த முடியாது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்துமாறு கோரி விளையாட்டுத்துறை அமைச்சருக்கு கடிதத்தையும் சம்பந்தப்பட்ட ஆவணங்களையும் கையளித்துள்ளோம்.