அரச மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம்

அரச மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம்

அரச மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம்

எழுத்தாளர் Bella Dalima

17 Aug, 2018 | 6:08 pm

இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் டெல்லியில் உள்ள ராஷ்ட்ரீய ஸ்மிரிதி திடலில் அரச மரியாதையுடன் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால், சிகிச்சை பலனின்றி நேற்று (16) மாலை உயிரிழந்தார்.

டெல்லி பாஜக அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று வாஜ்பாய் உடல் வைக்கப்பட்டது.

இதனையடுத்து, அங்கிருந்து பிற்பகல் 2 மணிக்கு வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் ஆரம்பமானது. அலங்கரிக்கப்பட்ட இராணுவ வாகனத்தில் வாஜ்பாயின் உடல் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது.

அவரது இறுதி ஊர்வலம் சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராஷ்ட்ரீய ஸ்மிரிதி ஸ்தல் என்ற இடத்தை அடைந்தது.

வாஜ்பாய் உடலை இராணுவ வாகனத்தில் இருந்து முப்படை வீரர்கள் இறக்கியபோது, பிரதமர் மோடி கண்ணீர் விட்டு அழுதார். அவருடன் இருந்த தலைவர்களும் கண்கலங்கினர்.

இராணுவ இசை மற்றும் வேத மந்திரங்கள் முழங்க இறுதிச்சடங்குகள் நடைபெற்ற பின்னர், முப்படையை சேர்ந்த தளபதிகள் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.

இதன்போது, வௌிநாட்டு மற்றும் உள்நாட்டுப் பிரமுகர்களும் தமது இறுதி மரியாதையை செலுத்தினர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

வாஜ்பாய் உடல் மீது போர்த்தப்பட்டிருந்த தேசிய கொடி அவரது பேத்தி நிகாரிகாவிடம் வழங்கப்பட்டது.

பின்னர், 21 குண்டுகள் முழங்க முழு அரச மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது.

இறுதி சடங்கில் பாஜக-வின் அமித்ஷா, அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்