வௌ்ளத்தில் மூழ்கிய கொச்சின் விமான நிலையம்

வௌ்ளத்தில் மூழ்கிய கொச்சின் விமான நிலையம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 73 ஆக அதிகரிப்பு

by Bella Dalima 16-08-2018 | 4:48 PM
வௌ்ளத்தில் மூழ்கிய கொச்சின் விமான நிலையம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 73 ஆக அதிகரிப்பு கேரளாவில் ஏற்பட்டுள்ள கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால், 60 ஆயிரத்திற்கும் அதிகமானோர் 1,750 தற்காலிக நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வௌ்ளத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக 101 வீடுகள் முற்றாக இடிந்து வீழ்ந்துள்ளதுடன், சுமார் 1500 வீடுகள் பாரியளவில் சேதமடைந்துள்ளன. வௌ்ள அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், கேரளாவிற்கு கூடுதலாக 12 தேசிய பேரிடர் மீட்புப் படைக்குழுவினர் சென்றுள்ளனர். இந்தியா-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றான கொச்சின் விமான நிலையம் முல்லை பெரியாறு அணை திறக்கப்பட்டதாலும், கனமழையினாலும் நீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக கொச்சி வரும் விமானங்கள் திருவனந்தபுரம் போன்ற வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன. எதிர்வரும் 18 ஆம் திகதி வரை கொச்சின் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில், வெள்ளம்போல் நீர் கொச்சின் விமான நிலையம் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.