யாழில் பெற்றோர் பெற்ற கடனுக்காக சிறுமியைத் தாக்கிய பெண் கைது
by Bella Dalima 16-08-2018 | 5:00 PM
Colombo (News 1st) யாழப்பாணம் - குடத்தனை பகுதியில் 11 வயதான சிறுமியை தாக்கிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடத்தனை பகுதியில் சிறுமியொருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு, அச்சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குடத்தனையில் வசித்துவரும் மனோரஞ்சன் தமிழினி என்ற சிறுமி, மாலை நேர வகுப்பிற்கு சென்ற போது, சிறுமியின் பெற்றோருக்கு கடன் கொடுத்த பெண்ணொருவர் சிறுமியை மறித்து தாக்கியுள்ளார்.
மூன்று சகோதரிகளைக் கொண்ட குடும்பத்தில் இரண்டாவது பிள்ளையே தமிழினி.
இவர் பருத்தித்துறை மெதடிஸ்ட் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் தரம் 6-இல் கல்விகற்று வருகின்றார்.
தமிழினியின் தந்தை மனோரஞ்சன் கடற்றொழில் செய்து வருவதுடன், தாய் ஜெயந்தி குடும்பத்தை பராமரித்து வருகின்றார்.
இவர்கள் வீடு கட்டுவதற்காக குடத்தனை பகுதியை சேர்ந்த பெண் ஒருவரிடம் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 இலட்சம் ரூபா கடன் பெற்றுள்ளனர்.
அன்றிலிருந்து கடந்த ஆண்டு வரை 3,20,000 ரூபா வட்டி கட்டி வந்துள்ளதுடன், ஒரு வருடமாக வட்டி கட்ட முடியாமல் போய்விட்டதாக தமிழினியின் பெற்றோர் தெரிவித்தனர்.
பணம் வழங்கிய குறித்த பெண் முழுத்தொகையையும் உடனடியாக மீள வழங்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார்.
இந்த பின்புலத்திலேயே சிறுமி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், காயமடைந்த மாணவி பருத்தித்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில், சிறுமியைத் தாக்கிய பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.