பொறுப்பற்ற அதிகாரிகளால் இழக்கப்படும் வாய்ப்புகள்

பொறுப்பற்ற அதிகாரிகளால் பொன்னான வாய்ப்புகளை இழக்கும் இளம் வீரர்கள்

by Staff Writer 16-08-2018 | 8:43 PM
Colombo (News 1st)  ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை பெறக்கூடிய பதக்கமொன்று அதிகாரிகளின் கவனயீனத்தால் இல்லாமற்போகும் நிலைமை தோன்றியுள்ளது. முதற்தடவையாக இம்முறை உள்ளடக்கப்பட்ட 400 மீட்டர் கலப்பு அஞ்சலோட்டத்திலிருந்து இலங்கை குழாம் நீக்கப்பட்டதன் மூலம் இந்த நிலைமை உருவாகியுள்ளது. அத்துடன், அதிகாரிகளின் பொறுப்பற்ற செயற்பாட்டால் உயரம் தாண்டுதலில் இலங்கை சாதனையாளரான உஷான் திவங்க போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தேசிய மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் உயரம் தாண்டுதல் சாம்பியனான உஷான் திவங்க பெரேரா தேசிய தெரிவுப் போட்டிகளில் 2.24 மீட்டர் உயரத்திற்கு தாவி, ஆசிய விளையாட்டு விழாவிற்கான அடைவு மட்டத்தை எட்டினார். எனினும், அவருடைய வாய்ப்பை ஆசிய விளையாட்டு விழா ஏற்பாட்டாளர்கள் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மூன்று ஆசிய விளையாட்டு விழாக்களில் வெண்கலப்பதக்கம் வென்ற வீரர்கள் வெளிப்படுத்திய ஆற்றல்களுடன் ஒப்பிடுகையில், உஷான் திவங்கவின் 2.24 மீட்டர் பெறுபேறு இம்முறை பதக்கம் ஒன்றை வெல்வதற்கான வாய்ப்பாக தென்படுகிறது. போலியோவினால் பாதிக்கப்பட்ட தாய், தந்தையரின் அர்ப்பணிப்பின் மூலம் தேசிய தரத்திற்கு உயர்ந்த இந்த வீரர், ஆசியாவை வெல்லும் இலட்சியத்தை அடையத் தடையாக இருப்பது இந்த நாட்டின் விளையாட்டுத்துறை அதிகாரிகளே என்பது கவலைக்குரிய விடயமாகும். ஆசிய விளையாட்டு விழாவில் இம்முறை மெய்வல்லுநர் போட்டிகளுக்காக 14 பேர் உள்ளடக்கப்பட்டிருந்தாலும் அவர்களில் 12 பேருக்கே தற்போது வாய்ப்புக் கிட்டியுள்ளது. திவங்கவுக்கு ஏற்பட்ட நிலைமையே கலப்பு 400 மீட்டர் ஓட்ட இலங்கை அணிக்கும் நேர்ந்துள்ளது. அணி உரிய முறையில் பதிவு செய்யப்படாததே அதற்குக் காரணம். இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் அறிமுகப்படுத்தப்படும் 400 மீட்டர் கலப்பு அஞ்சலோட்டத்தில் இலங்கை பதக்கமொன்றை வெல்லும் வாய்ப்பு இருந்தது. இந்த வருடத்திற்கான பெறுபேறுகளுக்கு அமைவாக, இலங்கை அணி இரண்டாமிடத்தில் இருப்பதன் மூலம் அந்த நம்பிக்கை உருவாகியது. 400 மீட்டர் கலப்பு அஞ்சலோட்டத்தில் உபமாலிகா ரத்னகுமாரியின் பெயர் மாத்திரம் உத்தியோகப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டு ஏனையோரின் பெயர்கள் குறிப்பிடப்படாததால், போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பை இலங்கை இழந்துள்ளது. தனி ஒரு வீராங்கனை கலப்பு போட்டியில் பங்குபற்ற முடியாது என்பதால், அவரது பதிவை இரத்து செய்வதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். இளம் வீர, வீராங்கனைகளுக்கு கிடைக்கும் இதுபோன்ற வாய்ப்புகள் அதிகாரிகளின் அசமந்தப் போக்கினால் இவ்வாறு இழக்கப்படுவதன் ஊடாக இந்நாட்டு விளையாட்டுத்துறையே பாதிக்கப்படுகின்றது. அத்துடன், திறமை வாய்ந்த வீர, வீராங்கனைகளும் வெறுப்புணர்வால் விளையாட்டுத்துறையை விட்டு வெளியேறும் நிலைமை உருவாகின்றது.