தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

தனியார் பஸ் ஊழியர்களின் பகிஷ்கரிப்பினால் போக்குவரத்து ஸ்தம்பிதம் 

by Staff Writer 16-08-2018 | 7:08 AM
Colombo (News 1st) தனியார் பஸ் ஊழியர்கள் நேற்று (15) நள்ளிரவு முதல் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளது. பிரதான நகரிங்களிலும் பஸ் போக்குவரத்து பாரியளவில் குறைவடைந்துள்ளதாக நியூஸ் பெஸ்ட்டின் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர்கள் இன்று (16) அதிகாலை முதல் பல பஸ் தரிப்பிடங்களுக்கும் சென்று பார்வையிட்டனர். கொழும்பு பிரதான பஸ்தரிப்பிடத்தில் பயணிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் கொழும்பு பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, மலையகத்தின் பல பகுதிகளிலும் தனியார் பஸ் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து குற்றங்களுக்காக அபராதம் அதிகரிக்கப்பட்டமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனியார் பஸ் ஊழியர்கள் நேற்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். 33 போக்குவரத்து விதி மீறல்களுக்கான புதிய அபராதத் தொகை, கடந்த ஜூலை மாதம் 15 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டது. குறைந்தபட்ச அபராதத்தை 500 ரூபா வரையிலும் அபராத பத்திரத்திற்கு அதிகபட்சமாக 3,000 ரூபா வரை அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டது. நாட்டிற்குள் நிலவும் வாகன நெரிசல், சட்டங்களை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கு அமைய, புதிய அபராதம் காரணமாக தாம் சிரமத்தை எதிர்கொள்வதாக தனியார் பஸ் ஊழியர் சங்கம் சுட்டிக்காட்டுகின்றது. எவ்வாறாயினும், இந்த பணிப்பகிஷ்கரிப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் உள்ளிட்ட பஸ் உரிமையாளர்களின் சங்கங்கள் தெரிவித்துள்ளன.