மடு திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது

மருதமடு அன்னையின் ஆவணித் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது

by Staff Writer 15-08-2018 | 9:18 PM
Colombo (News 1st)  இலங்கையின் பிரசித்தி பெற்ற தேவாலயங்களில் ஒன்றான மருதமடு அன்னையின் ஆவணித் திருவிழா இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. இன, மத பேதமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்வது மடு ஆலயத்தின் சிறப்பாகும். ஈழத்தின் வட புலத்தில் மன்னார் மாவட்டத்தின் மாந்தை பிரதேசத்தில் வீற்றிருக்கும் மருதமடு தேவாலயத்தின் வருடாந்த உற்சவம் பல்லாயிரக்கணக்கான மக்கள் புடை சூழ இன்று நடைபெற்றது. கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில், இன்று காலை 6.15 மணியளவில் திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மடு அன்னையின் ஆவணித் திருவிழாவில் பங்கேற்றிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கிறிஸ்தவ விவகார அமைச்சினால் வருடாந்தம் திருவிழாவிற்காக வழங்கும் நிதியை, கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையிடம் கையளித்தார். அதனைத்தொடர்ந்து அன்னையின் திருச்சொரூப பவனி இடம்பெற்றது. மடு அன்னையின் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்கள் கலந்துகொண்டு ஆசி பெற்றனர். திருவிழா நிறைவுபெற்ற பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் மடுத்திருத்தலத்தை பார்வையிட்டதுடன், அங்கு கூடியிருந்த மக்களுடனும் கலந்துரையாடினர்.