நேவி சம்பத்திற்கு விளக்கமறியல்

நேவி சம்பத்திற்கு விளக்கமறியல்

by Staff Writer 15-08-2018 | 7:23 PM
Colombo (News 1st)  நேவி சம்பத் என அழைக்கப்படும் முன்னாள் லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு - கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் சந்தேகநபரை ஆஜர்ப்படுத்தியதை அடுத்து விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வௌ்ளை வேனை பயன்படுத்தி கொழும்பில் 11 இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கியமை தொடர்பான வழக்கின் 10 ஆவது சந்தேகநபராக முன்னாள் லெப்டினன்ட் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி குறிப்பிடப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு தேவையான வாக்குமூலத்தை சிறைச்சாலைக்குள் வைத்து குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு சந்தேகநபர் வழங்குவதற்கான அனுமதியை வழங்குமாறு சிறைச்சாலைகள் அத்தியட்சகருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். கொழும்பு - லோட்டஸ் வீதி பகுதியில் கடந்த 13 ஆம் திகதி மாலை சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். கைது செய்யும் போது, சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சியின் நிழற்படம் அடங்கிய மற்றுமொரு நபரின் பெயரில் தயாரிக்கப்பட்ட அடையாள அட்டையை வைத்திருந்ததாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். போலி அடையாள அட்டை உள்ளிட்ட போலி ஆவணங்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ளெிநாட்டு பயணக் கடவுச்சீட்டை பயன்படுத்தி கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி முன்னாள் லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி மலோசியாவிற்கு சென்றிருந்ததாகவும் மன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் நாட்டிலிருந்து தப்பிச்செல்ல தேவையான போலி ஆவணங்களை தயாரிப்பதற்கு முன்னாள் கடற்படைத் தளபதியும் தற்போதைய பாதுகாப்பு பிரிவின் பிரதானியுமான அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்தன உதவி புரிந்திருப்பார் என பலத்த சந்தேகம் நிலவுவதாகவும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். நீதிமன்றத்தை புறக்கணித்த சந்தேகநபர் நாட்டிலிருந்து தப்பிச்செல்வதற்கு எவரேனும் உதவி ஒத்தாசை புரிந்திருப்பின், அது தொடர்பில் மன்றுக்கு அறிக்கையிடுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வௌிநாட்டிற்கு சென்றிருந்த சந்தேகநபர் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாட்டிற்கு வருகை தந்து தொம்பே பகுதியிலுள்ள தோட்டமொன்றின் காவலாளியாகவும், தோட்ட உரிமையாளரின் வீட்டின் பாதுகாவலராகவும் செயற்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.