கேரளாவில் வௌ்ளம்: நிவாரணம் வழங்கிய ரோஹினி

கேரளாவில் வௌ்ளம்: 2 இலட்சம் ரூபா நிவாரணம் வழங்கிய ரோஹினி

by Bella Dalima 15-08-2018 | 4:40 PM
தொடர் கனமழையால் கேரளா வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலையில், நடிகை ரோஹினி கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு 2 இலட்சம் (இந்திய) ரூபா நன்கொடை வழங்கியுள்ளார். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பியுள்ளன. 33 அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக பெரும்பாலான ஏரிகள், குளங்களும் நிரம்பிவிட்டன. வரலாறு காணாத பேரழிவை கேரள சந்தித்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம், கப்பற்படை மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், மழை மேலும் 2 நாட்களுக்கு தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழை காரணமாக மாநிலத்தில் 8,000 கோடி ரூபாவிற்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார். மத்திய அரசு ஒதுக்கியுள்ள 100 கோடி ரூபா போதாது என்றும் முதற்கட்டமாக 1200 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் கேரளாவிற்கு நிவாரணத் தொகையை அறிவித்துள்ளன. அதேபோல், பிரபலங்கள் பலரும் முதல்வர் நிவாரண நிதிக்கு உதவித்தொகை அனுப்பி வருகின்றனர். நடிகர்கள் சூர்யா, கார்த்தி, கமல்ஹாசன் உள்ளிட்டோர் 25 இலட்சம் அறிவித்துள்ளனர். இந்த நிலையில், நடிகை ரோஹினி 2 இலட்ச ரூபா நிதியை கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு அளித்துள்ளார்.