கடும்மழை: நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

கடும் மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன

by Staff Writer 15-08-2018 | 10:29 AM
Colombo (News 1st) கடும் மழையுடனான வானிலை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. காசல்ரீ மற்றும் மவுசாகலை நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வான்மட்டத்தை அடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் நுவரெலியா மாவட்ட காரியாலயம் தெரிவித்துள்ளது. அதேநேரம், லக்ஸபான நீர்த்தேக்கத்தின் வான்கதவொன்றும் திறக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் 2 வான்கதவுகளும் 3 அடி உயரம் வரை திறக்கப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமானது தொடர்ந்தும் உயர்ந்து வருவதால், அதன் ஒரு வான் கதவு திறக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் இன்று (15) 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்கம் எதிர்வுகூறியுள்ளது. கடற்பிராந்தியங்களில் காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் என்பதால், கடல்சார் ஊழியர்களை எச்சரிக்கையுடன் செயற்படுமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

ஏனைய செய்திகள்