இந்தோனேசியாவில் உயர்தர பரீட்சையில் தோற்றும் மாணவர்

இலங்கை மாணவருக்கு இந்தோனேசியாவில் இருந்தவாறு உயர்தரப் பரீட்சையில் தோற்ற வாய்ப்பு

by Bella Dalima 15-08-2018 | 9:38 PM
Colombo (News 1st)  ஆசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கும் இலங்கை நீச்சல் குழாம் இன்று இந்தோனேசியாவிற்கு பயணமானது. ஆசிய விளையாட்டு விழா எதிர்வரும் சனிக்கிழமை (18) இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் ஆரம்பமாகவுள்ளது. ஆசிய விளையாட்டு விழாவிற்கான இலங்கை நீச்சல் குழாத்தில் இடம்பெற்றுள்ள பம்பலப்பிட்டி புனித பீற்றர்ஸ் கல்லூரியின் அகலங்க பீரிஸ் இந்த முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவராவார். அதற்கமைய, அவர் இந்தோனேசியாவிலிருந்தவாறு பரீட்சையில் தோற்றுவதற்கான வாய்ப்பை கல்வித்துறை அதிகாரிகள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். இந்த நாட்டு மாணவர் ஒருவர் வெளிநாட்டில் போட்டியிடும் அதேநேரம் பரீட்சை எழுதும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். அகலங்க பீரிஸ் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இருக்கும் காலத்தில் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் ஆங்கிலம், பொதுஅறிவு மற்றும் கணக்கியல் ஆகிய பரீட்சைகளில் தோற்றவுள்ளார். அகலங்கவிற்கான பரீட்சை ஏற்பாடுகள் தொடர்பாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித பின்வருமாறு கருத்து தெரிவித்தார்.
தேசிய ஒலிம்பிக் குழுவின் ஊடாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக கல்வி அமைச்சர் கொள்கை ரீதியான தீர்மானமொன்றை எடுத்தார். இந்த மாணவர் வெளிநாட்டில் இருந்தவாறு பரீட்சை எழுதத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது என தீர்மானிக்கப்பட்டது. அந்த உத்தரவிற்கு அமைவாக நாம் எதிர்வரும் 18 ஆம் திகதி பொது அறிவு, 20 ஆம் திகதி ஆங்கிலம், 21 ஆம் திகதி கணக்கியல் ஆகிய மூன்று பாடங்களினதும் பகுதி ஒன்றுக்கான வினாப்பத்திரங்களுக்கு விடை எழுதுவதற்கான சந்தர்ப்பத்தை மாணவரான அகலங்க பீரிஸூக்கு வழங்கவுள்ளோம். இது இந்தோனேசிய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெறவுள்ளது. வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் அனுமதியும் எமக்கு கிடைத்துள்ளது. இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இருவர் இந்தப் பரீட்சையை நடத்துவதற்காக இந்தோனேசியா நோக்கி பயணமாகவுள்ளனர்.