தனியார்பஸ் ஊழியர்கள் நள்ளிரவு முதல் பகிஷ்கரிப்பில்

தனியார் பஸ் ஊழியர்கள் நள்ளிரவு முதல் பகிஷ்கரிப்பில்

by Staff Writer 15-08-2018 | 6:58 AM
Colombo (News 1st) தனியார் பஸ் ஊழியர் சங்கத்தின் ஒரு பிரிவினர், இன்று (15) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுப்பதற்குத் தீர்மானித்துள்ளனர். அதிகரிக்கப்பட்ட அபராதத் தொகையைக் குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர். தமது கோரிக்கைகள் தொடர்பில் பொறுப்புவாய்ந்த பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டும், இதுவரை எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை என அகில இலங்கை தனியார் பஸ் ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டாளர் யூ.கே. குமாரரத்ன ரேணுக தெரிவித்துள்ளார்.
அதிகரிக்கப்பட்டுள்ள அபராதத் தொகை தொடர்பில் பொலிஸ்மா அதிபருக்கும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் தாம் அறிவித்ததாகவும் ஆனால், இதுவரையில் அது தொடர்பில் எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்த அகில இலங்கை தனியார் பஸ் ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டாளர் யூ.கே. குமாரரத்ன ரேணுக, சிங்கப்பூருக்கு சமமான அபராதத் தொகை அதிகரிப்பு எங்களுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டார். இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில், இன்று (15) இரவு 12 மணியிலிருந்து நாடு தழுவிய பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளோம் எனவும் குமாரரத்ன ரேணுக மேலும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இலங்கை தனியார் பஸ் ஊழியர் சங்கம் உள்ளிட்ட பஸ் உரிமையாளர் சங்கத்தினர் இந்தப் பகிஷ்கரிப்புக்கு ஆதரவு வழங்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர். கடந்த வாரத்தில் ரயில் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தபோது, போக்குவரத்து சேவைகளுக்காக பஸ் ஊழியர்கள் மிகுந்த ஒத்துழைப்பை நல்கியிருந்ததாகவும் ஆனால், தற்போது உயர்தர பரீட்சை நடைபெற்றுவரும் நிலையில், பகிஷ்கரிப்புக்கு ஆதரவு வழங்க முடியாது எனவும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இதேவேளை, உயர்தரப் பரீட்சை நடைபெற்று வருகின்றமையால், பணிப்பகிஷ்கரிப்பினை மேற்கொள்ளாது சேவையில் ஈடுபடுமாறு பஸ் ஊழியர்களிடம் வேண்டுகோள் விடுப்பதாக குறித்த சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்த விடயம் தொடர்பில் தனியார் பஸ் சங்க சம்மேளனத்திடம் வினவியபோது,
பணிப்பகிஷ்கரிப்புக்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பது தொடர்பில் மத்திய செயற்குழு இன்று (15) கூடி தீர்மானிக்கவுள்ளதாக சம்மேளனத்தின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை, தனியார் பஸ் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ஜீ.எஸ். விதானகேவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது,
பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் அமைச்சுக்கு அறிவிக்கப்படவில்லை என குறிப்பிட்ட அவர், எவ்வாறாயினும், ஒழுக்கம் மிக்க சாரதிகளை உருவாக்கும் நோக்கிலேயே அபராதத்தொகை அதிகரிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.