மா ஓயாவிற்குள் இரசாயன கலப்பு

மா ஓயாவிற்குள் இரசாயன கலப்பு

by Bella Dalima 14-08-2018 | 8:51 PM
Colombo (News 1st)  பெருந்திரளான மக்கள் நாளாந்தம் பயன்படுத்தும் மா ஓயாவிற்குள் இரசாயனப்பொருட்கள் கலக்கப்படுகின்றமை தொடர்பில் தகவல் வௌியாகியுள்ளது. வென்னப்புவ பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட சின்தாந்திரிய பகுதியில் இருந்து பயணிக்கும் மா ஓயாவை பாதுகாப்பது தொடர்பில் தௌிவூட்டி, அதிகாரிகள் பதாகைகளைப் பொருத்தி நடவடிக்கை எடுத்துள்ள போதிலும், அதனால் எவ்விதப் பயனும் ஏற்பட்டிருக்கவில்லை. கழிவுடன் கூடிய பொலித்தீன், கணணி பாகங்கள், நீரினுள் வீசப்படும் பொருட்களை பிரதேசவாசிகள் ஊடாக அகற்றி சுத்தப்படுத்தும் நடவடிக்கை நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எனினும், அச்சிடுவதற்காகப் பயன்படுத்தப்படும் டோனர்கள் இந்த நீரில் கழுவப்படுவதால், அதிலுள்ள நிறப்பூச்சுகள் நீரில் கலக்கின்றன. இந்த நீர் மாசாக்கல் தொடர்பில் சின்தாந்திரிய கிராம சேவகர் அறிந்துள்ளதாக பிரதேச மக்கள் கூறிய போதிலும், இது தொடர்பில் பிரதேச செயலாளரின் கவனத்திற்கு நியூஸ்ஃபெஸ்ட் கொண்டு செல்லும் வரை, அவர் அறிந்திருக்கவில்லை. குறித்த பகுதியின் தற்போதைய நிலை தொடர்பில் இன்று மாலை தாம் தலையீடு செய்து ஆராய்ந்து பார்த்ததாக வென்னப்புவ பிரதேச செயலாளர் சுஜீவ பெர்னாண்டோ கூறினார். மா ஓயாவில் கழிவுப்பொருட்களை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். சமுத்திர பாதுகாப்பு அதிகார சபையின் தலையீட்டுடன் இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. கொச்சிக்கடையிலுள்ள வர்த்தக நிறுவனமொன்றே, சின்தாந்திரிய பிரதேச மக்களின் ஊடாக இந்த செயற்பாட்டை முன்னெடுத்துள்ளது. இந்த நீர் மாசாக்கல் செயற்பாடு தற்போது நிறுத்தப்பட்டுள்ள போதிலும், ஏற்பட்டுள்ள சூழல் பாதிப்பிற்கு பொறுப்புக்கூறுவது யார்? அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கை என்ன?