மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது

மரணதண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது: கத்தோலிக்க திருச்சபை அறிவிப்பு

by Staff Writer 14-08-2018 | 5:14 PM
மரணதண்டனையை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது என கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளது. மரணதண்டனை தொடர்பில் கத்தோலிக்கத் திருச்சபையின் மத இலக்கண நூலின் 2267 ஆம் சரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தத்திற்கு பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அனுமதி அளித்துள்ளதாக கத்தோலிக்க ஆயர் பேரவை அறிக்கை வௌியிட்டுள்ளது. இதேவேளை, மரணதண்டனை விதிக்கப்படும்போது தனி நபரின் உரிமை மீறப்படுவதாகவும் இது தனிப்பட்ட கௌரவத்திற்கு எதிரான தாக்குதல் என்பதாலும் மரணதண்டனையை அனுமதிக்க முடியாது என பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளதாக கத்தோலிக்க ஆயர் பேரவையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான சந்தர்ப்பங்களிலும் சமாதானத்தையும் பாதுகாப்பையும் பேண வேண்டிய சந்தர்ப்பங்களிலும் மரணதண்டனையை நடைமுறைப்படுத்துவது தவறில்லை என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.