கரையொதுங்கியவை இந்திய கழிவுப் பொருட்களா?

புத்தளத்தில் கரையொதுங்கிய மருத்துவக் கழிவுப்பொருட்கள் கேரளாவிலிருந்து வந்தவையா?

by Bella Dalima 14-08-2018 | 9:02 PM
Colombo (News 1st)  இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வீசப்பட்ட மருத்துவக் கழிவுகள் உள்ளிட்ட கழிவுப் பொருட்கள் புத்தளம் கடற்கரையில் கரையொதுங்கியுள்ளமை தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் நேற்று (13) செய்தி வௌியிட்டிருந்தது. இது தொடர்பில் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை உள்ளிட்ட சில குழுக்கள் இன்று பரிசோதனைகளை மேற்கொண்டன. புத்தளம் மாவட்டத்தின் உடப்பு முதல் தொடுவாய் வரையான சுமார் 10 கிலோமீட்டர் கடற்கரைப் பகுதியில் கழிவுப்பொருட்கள் கரையொதுங்கியுள்ளன. மருத்துவக் கழிவுப்பொருட்கள், கண்ணாடிப் போத்தல்கள், பொலித்தீன் போன்ற கழிவுப்பொருட்களே அதிகளவில் கரையொதுங்கியுள்ளமையை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. கரையொதுங்கிய கழிவுப்பொருட்கள் தொடர்பில் மின்சக்தி அமைச்சின் அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை அதிகாரிகள் இன்று பிற்பகல் பரிசோதனை மேற்கொண்டனர். இதன்போது, கதிரியக்க கழிவுப்பொருட்கள் எவையும் அடையாளம் காணப்படவில்லை. கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகள் கரையொதுங்கிய கழிவுப்பொருட்கள் தொடர்பில் இன்று நண்பகல் பரிசோதனை மேற்கொண்டனர். இதன்போது, இந்தியா, சீனா, நெதர்லாந்து ஆகிய நாடுகளின் பிளாஸ்டிக் போத்தல்கள், குடிபானங்கள், அழகுசாதனப்பொருட்கள், மற்றும் மருத்துவப் பொருட்களை சேகரித்ததாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் புத்தளம் மாவட்ட பணிப்பாளர் பிரியங்கா சமரசேகர குறிப்பிட்டார். கற்பிட்டி தொடக்கம் மாம்புரி வரை இந்த ஆய்வினை மேற்கொண்டு, கழிவுகளை உரிய முறையில் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்த மருத்துவ கழிவுப்பொருட்கள் தென் இந்தியாவின் கேரளாவிலிருந்து இலங்கைக்கு கரையொதுங்கியிருக்கக்கூடும் என கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த கழிவுப்பொருட்கள் தொடர்பில் பல பிரச்சினைகள் எழுந்துள்ளன. கேரள பிராந்தியத்தில் தற்போது பெய்துவரும் கடும் மழையுடனான காலநிலையால், சில பகுதிகள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன. கேரளாவில் ஏற்பட்டுள்ள வௌ்ளப்பெருக்கினால் கடல் வழியாக நாட்டிற்கு வந்திருப்பின், ஓரிடத்தில் அவை கரையொதுங்குவது எவ்வாறு? அவ்வாறில்லையெனில், திட்டமிட்டு யாராவது கடலில் கொட்டினார்களா? வைத்தியசாலையில் பயன்படுத்தப்பட்ட பொருட்களாயின் அவற்றை அடையாளம் காண்பதற்கு பல வழிகள் உள்ளன. இது தொடர்பில் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவரிடம் வினவியபோது, இந்த விடயம் தொடர்பில் உயர்ஸ்தானிகராலயம் கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார். அத்துடன், இந்தியத் தரப்பில் இது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறினார். கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை காரணமாக இலங்கையில் கழிவுப்பொருட்கள் கரையொதுங்கியுள்ளனவா என்பது தொடர்பிலும் தாம் கவனம் செலுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.