இலங்கை நாணயத்தாள்களை சீனா அச்சிடுகிறதா?

இலங்கையின் நாணயத்தாள்களை அச்சிட சீன நிறுவனத்தில் முற்பதிவு: மத்திய வங்கி மறுப்பு

by Staff Writer 14-08-2018 | 9:19 PM
Colombo (News 1st)  இலங்கை உள்ளிட்ட சில நாடுகளின் நாணயத்தாள்களை அச்சிட தமது அரசாங்கத்தின் நிதி அச்சிடும் நிறுவனத்தில் முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. நாணயத்தாள்களை அச்சிடுவதற்கு பல நாடுகள் முற்பதிவு செய்துள்ளதாக, சீன வங்கியின் நாணயத்தாள் அச்சிடும் நிறுவனத்தின் தலைவர் லீ குயிஷென்க், சீன வங்கியினால் தயாரிக்கப்படும் மாதாந்த சஞ்சிகை ஒன்றிற்கு தெரிவித்துள்ளார். அவற்றில் இலங்கை, நேபாளம், பங்களாதேஷ், மலேசியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சீன வங்கியின் நாணயத்தாள் அச்சிடும் நிறுவனம், உலகின் பாரிய நாணயத்தாள் அச்சிடும் நிறுவனமாகக் கருதப்படுகின்றது. இலங்கைக்கு தேவையான எவ்வித பணமும் சீனாவில் அச்சிடப்படுவதில்லை என இது தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் வினவியபோது இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டது. சீனாவின் நாணயத்தாள் அச்சிடும் கூட்டுத்தாபனத்துடன் எவ்வித தொடர்புகளும் இல்லை எனவும் மத்திய வங்கியின் பேச்சாளர் ஒருவர் கூறினார். இதேவேளை, இந்தியாவின் நாணயத்தாள்களை அச்சிடுவதற்கு குறித்த சீன நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் இன்று செய்தி வௌியிட்டிருந்தன. எனினும், அந்த ஊடக அறிக்கைகளை நிராகரிப்பதாக இந்திய அரசாங்கம் தற்போது அறிக்கை வௌியிட்டுள்ளது.