வெவர்லி தோட்ட மக்களின் நூதன போராட்டம் கைவிடப்பட்டது

வெவர்லி தோட்ட மக்களின் நூதன போராட்டம் கைவிடப்பட்டது

வெவர்லி தோட்ட மக்களின் நூதன போராட்டம் கைவிடப்பட்டது

எழுத்தாளர் Bella Dalima

14 Aug, 2018 | 8:55 pm

Colombo (News 1st)  அக்கரைப்பத்தனை – வெவர்லி தோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது.

அக்கரைப்பத்தனை பெருந்தோட்டயாக்கத்திற்கு சொந்தமான வெவர்லி தோட்டத்தைச் சேர்ந்த இருவர், சில கோரிக்கைகளை முன்வைத்து கடந்த சனிக்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

  • தோட்டத்தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையில் ஜனாதிபதி தலையிட்டு, உரிய தீர்வை வழங்க வேண்டும்,
  • கடந்த கூட்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட நிலுவை சம்பளம் வழங்கப்பட வேண்டும்
  • காடாகியுள்ள தேயிலை மலைகளை துப்பரவு செய்து, நிரந்தர வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்
  • மலையக பாடசாலைகளின் ஆசிரியர் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும்
  • சுகாதார செயற்பாடுகளை முறையாக மேற்கொள்ள வேண்டும்
  • தோட்டத்தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்

போன்ற கோரிக்கைகள் அவர்களால் முன்வைக்கப்பட்டிருந்தன.

வெவர்லி தோட்ட விளையாட்டு மைதானத்தில் கூடாரம் அமைத்து, கடந்த மூன்று நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாகியது.

இதனை அடுத்து, குறித்த நபரை சவப்பெட்டியில் வைத்து, டயகம – தலவாக்கலை பிரதான வீதியில் இன்று காலை தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தினால் டயகம – தலவாக்கலை பிரதான வீதியின் போக்குவரத்து இரண்டு மணித்தியாலங்கள் வரை பாதிக்கப்பட்டதுடன், பொலிஸார் தலையீடு செய்து போக்குவரத்து சீர்செய்யப்பட்டது.

வெவர்லி, போட்மோர், ஆடலி, மொனிங்டன் கீழ்பிரிவு மற்றும் மேற்பிரிவு மக்களும் இன்றைய தினம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

மத்திய மாகாண சபை உறுப்பினர், ஆர்.ராஜாராம் இன்று பிற்பகல் சம்பவ இடத்திற்கு சென்று மக்களுடன் கலந்துரையாடினார்.

வீ.இராதாகிருஷ்ணனும் பழனி திகாரம்பரமும் பாராளுமன்றத்தில் இந்த பிரச்சினைகள் தொடர்பில் பேசுவதாக வாக்குறுதியளித்து, உண்ணாவிரதத்தைக் கைவிடக் கோரியதாக ஆர்.ராஜாராம் கூறியுள்ளார்.

இதனையடுத்து உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது.

இதேவேளை, உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட நபர் படுத்திருந்த சவப்பெட்டிக்கு இறுதிக்கிரியைகளை நடத்தி மக்கள் அதற்கு எரியூட்டினர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்