ரயில்வே தொழிற்சங்கத்தினரின் பகிஷ்கரிப்பு முடிவு

முடிவுக்கு வந்தது ரயில்வே தொழிற்சங்கத்தினரின் பணிப்பகிஷ்கரிப்பு

by Staff Writer 12-08-2018 | 10:58 AM
Colombo (News 1st) ரயில்வே தொழிற்சங்கங்கள் முன்னெடுத்திருந்த பணிப்பகிஷ்கரிப்பு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. பொலன்னறுவையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று (12) காலை தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். இந்தப் பேச்சுவார்த்தைகளை அடுத்து, தொழிற்சங்க நடவடிக்கையைக் கைவிடத் தீர்மானித்ததாக ரயில்வே பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைமை செயலாளர் பீ.எம்.பீ. பீரிஸ் கூறினார். ரயில்வே ஊழியர்களின் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தலைமையிலான அமைச்சரவை உபகுழுவுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் நிறைவேற்றிக் கொள்ளப்படவில்லை என தெரிவித்து ரயில்வே தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டு வந்தன. கடந்த எட்டாம் திகதி முன்னறிவித்தலின்றி ஆரம்பிக்கப்ட்ட பணிப்பகிஷ்கரிப்பினால் ரயில் பயணிகள் பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்கியிருந்தனர். இந்த பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் ரயில் சாரதிகள் பாதுகாப்புஉத்தியோகத்தர்கள், நிலைபொறுப்பதிகாரிகள் மற்றும் கட்டுபாட்டாளர்களின் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பொலன்னறுவையில் சந்தித்தனர். இந்த கலந்துரையாடலின்போது சாதகமான பதில் கிடைத்ததாகரயில்வே தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

ஏனைய செய்திகள்