கேரளாவின் பல மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை

கேரளாவின் பல மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை

by Staff Writer 12-08-2018 | 1:55 PM
கேரளாவில் நிலவும் சீரற்ற வானிலையால் பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த சிவப்பு எச்சரிக்கை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மாநில பேரழிவு மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில், இயற்கை அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. மேலும், பொதுமக்கள் 30,000 பேர் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சுமார் 1,031 ஹெக்டயர் நிலப்பரப்பு அழிவடைந்துள்ளதுடன், 25 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளதாக கேரள மாநில இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், கேரளாவில் கடந்த மே மாதம் 29 ஆம் திகதியிலிருந்து நிலவும் சீரற்ற காலநிலையால் இதுவரை, 3.42 பில்லியன் இந்திய ரூபா பெறுமதியான சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் 26,824 ஹெக்டயர் நிலப்பரப்பு அழிவடைந்துள்ளதாகவும் மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, மாநில உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று (12) செல்லவுள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட கேரள முதல்வர் பினராயி விஜயன், வீடுகள் மற்றும் விளைநிலங்களை இழந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபாவும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 4 இலட்சம் ரூபாவும் நிவாரணமாக வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார். வெள்ளத்தில் ஆவணங்களை இழந்தவர்களுக்கு இலவசமாக அவற்றை மீள வழங்குவதற்கும் கேரள முதல்வர் உறுதியளித்துள்ளார். இதேவேளை, இயற்கை இடரை எதிர்நோக்கியுள்ள கேரளாவுக்கு பாண்டிச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி 1 கோடி ரூபா நிதியுதவி அறிவித்துள்ளார். நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் 25 இலட்சம் ரூபா நிதியுதவியினை பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.