கௌரவத்தை காப்பாற்றியது இலங்கை அணி!

கௌரவத்தை காப்பாற்றியது இலங்கை அணி!

கௌரவத்தை காப்பாற்றியது இலங்கை அணி!

எழுத்தாளர் Staff Writer

12 Aug, 2018 | 9:03 pm

தென் ஆபிரிக்காவுக்கு எதிரான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியை இலங்கை அணி 178 ஓட்டங்களால் வெற்றிகொண்டது.

இலங்கை நிர்ணயித்த 300 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய தென் ஆபிரிக்க அணி 24.4 ஓவர்களில் 121 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 299 ஓட்டங்களைப் பெற்றது.

அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் ஆட்டமிழக்காமல் 97 ஓட்டங்களையும் நிரோஷன் திக்வெல்ல 43 ஓட்டங்களையும் குசல் மென்டிஸ் 38 ஓட்டங்களையும் பெற்றனர்.

வெற்றி இலக்கான 300 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய தென் ஆபிரிக்க அணி ஓட்டம் பெறுவதற்கு முன்னர் முதல் விக்கெட்டை இழந்தது.

இதனிடையே தென் ஆபிரிக்க முதல் 20 ஓட்டங்களை பௌண்டரிகளின் மூலம் பெற்றதும் சுட்டிக்காட்டத்தக்கது.

அகில தனஞ்சய அபாரமாக பந்துவீச தென் ஆபிரிக்க துடுப்பாட்ட வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

பின்வரிசையில் 10 ஓட்டங்களுக்குள் 5 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டன.

அணித்தலைவர் க்வின்டன் டி கொக் 54 ஓட்டங்களைப் பெற்றதுடன், ஏனையோரில் எய்டன் மக்ரம், ஜோன் போல் டுமினி, கெகிஷோ ரபாடா ஆகியோரால் மட்டுமே இரட்டை இலக்கை அடைய முடிந்தது.

பந்துவீச்சில் அகில தனஞ்சய 9 ஓவர்களில் 29 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களையும் லஹிரு குமார 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

எவ்வாறாயினும், முதல் 3 போட்டிகளையும் வெற்றிகொண்ட தென் ஆபிரிக்கா சர்வதேச ஒருநாள் தொடரை 3 – 2 என கைப்பற்றியது.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக அகில தனஞ்சய தெரிவாக தொடரின் சிறந்த வீரர் விருது தென்னாபிரிக்காவின் ஜே.பீ.டுமினி வசமானது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்