தொழிற்சங்க நடவடிக்கையால் 70 மில்லியன் ரூபா நட்டம்

ரயில்வே ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கையால் 70 மில்லியன் ரூபா வருமான இழப்பு

by Staff Writer 11-08-2018 | 5:51 PM
Colombo (News 1st) ரயில்வே ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கையினால் 70 மில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில்வே திணைக்களத்தினால் நாளாந்தம் 17 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்படுவதாக ரயில்வே திணைக்களத்தின் வர்த்தகப் பிரிவு பிரதி அத்தியட்சகர் என். ஜே. இதிபொல தெரிவித்தார். ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக தபால் மற்றும் பொருட்கள் விநியோகமும் தடைப்பட்டுள்ளது. ஒன்லைன் மூலம் ரயில் பருவகால சீட்டுக்களை பெற்றுக்கொண்டுள்ள பயணிகளுக்கு பணத்தை மீள செலுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ரயில்வே திணைக்களத்தின் வர்த்தகப் பிரிவு பிரதி அத்தியட்சகர் குறிப்பிட்டார். இதனிடையே இன்று எரிபொருள் ரயிலொன்றும் பயணிகள் ரயிலொன்றும் பயணத்தில் ஈடுபடுத்தப்பட்டன. குறித்த எரிபொருள் ரயில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கோட்டையிலருந்து மொரட்டுவை வரையிலும் மொரட்டுவையிலிருந்து வேயங்கொட வரையிலும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, ரயில்வே ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பைக் கைவிடும் வரையில் பேச்சு வார்த்தைகள் கைவிடப்படுவதாக இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்தார். இது தொடர்பில் ரயில்வே சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொடவிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியபோது, பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடப்போவதில்லையென  குறிப்பிட்டார்.