காகிதப்பைகள் பயன்பாட்டை சட்டப்பூர்வமாக்க தீர்மானம்

மருந்தகம், பேக்கரிகளில் காகிதப் பைகளின் பயன்பாட்டை சட்டப்பூர்வமாக்க தீர்மானம்

by Bella Dalima 11-08-2018 | 3:45 PM
Colombo (News 1st) மருந்தகம் மற்றும் பேக்கரிகளில் காகிதத்தால் தயாரிக்கப்பட்ட பைகளை பயன்படுத்துவதை சட்டப்பூர்வமாக்க மத்திய சுற்றாடல் அதிகார சபை தீர்மானித்துள்ளது. இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனிடையே, குடிபானங்களுக்காக பயன்படுத்தப்படும் குழாய்களுக்கு (Straw) மாற்றீடாக அவற்றை கடதாசியை பயன்படுத்தி உற்பத்தி செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். குழாய்களை (Straw) கடதாசியில் உற்பத்தி செய்வது கட்டாயமாக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். தற்போது, நுகர்வோருக்கு விநியோகிக்கப்படும் பொலித்தீன் அளவு அதிகரித்துள்ளமையால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்தது. அண்மையில் பொலித்தீன் பாவனைக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்தும் அதன் பாவனை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. எனவே, தடை செய்யப்பட்ட பொலித்தீன் பாவனையில் ஈடுபடுவோர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் மத்திய சுற்றாடல் அதிகார சபை குறிப்பிட்டது. இதனிடையே, பல்பொருள் அங்காடி வர்த்தகர்களை தௌிவூட்டும் நோக்கில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்தார். மேலும், குறைந்த விலையில் கடதாசி உற்பத்திகளை மேற்கொள்வதனூடாக இலகு விலையில் உற்பத்திகளை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.