உரியமுறையில் 10 பில்லியன் கடன் வழங்கப்பட்டதா? 

மக்கள் வங்கி பணிப்பாளர் சபை உறுப்பினருக்கு உரியமுறையில் 10 பில்லியன் கடன் வழங்கப்பட்டதா? 

by Staff Writer 11-08-2018 | 9:25 PM
Colombo (News 1st) மக்கள் வங்கி பணிப்பாளர் சபை உறுப்பினரான ஜெஹான் அமரதுங்க, MTD Walkers என்ற நிறுவனத்தின் நிறைவேற்று உப தலைவராகவும் செயற்பட்டு வருகின்றார். மக்கள் வங்கியிடமிருந்து MTD Walkers நிறுவனத்திற்கு 10 பில்லியன் கடனை இவர் பெற்றுக் கொண்டமை தொடர்பில் தற்போது அதிகம் பேசப்படுகின்றது. இந்த கொடுக்கல் வாங்கல் உரிய முறையில் இடம்பெற்றுள்ளதாக மக்கள் வங்கி அடிக்கடி தெரிவித்தது. நிறுவனத்தின் வர்த்தகக் கட்டமைப்பு மற்றும் கடனை மீளச்செலுத்தும் இயலுமை ஆகியவற்றை கருத்திற்கொண்டு கடன் வழங்கப்பட்டுள்ளதாக வங்கியின் தலைவர் ஹேமசிறி பெர்னாண்டோ அறிக்கை ஒன்றை வௌியிட்டு சுட்டிக்காட்டியிருந்தார். ஜெகான் அமரதுங்க மற்றும் MTD Walkers நிறுவனம் சட்டத்தின் முன் வேறுவேறாகக் கருதப்படும் இரண்டு பிரிவுகள் என்பதும் இந்த கொடுக்கல் வாங்கலில் பிரச்சினை இல்லை என்பதும் ஹேமசிறி பொர்னாண்டோவின் கருத்தாகும். அவர் கூறும் வகையில், மத்திய வங்கி விதிக்கும் விதிமுறைகள் மற்றும் ஏனைய விடயங்களை இந்த கொடுக்கல் வாங்கலில் மக்கள் வங்கி பின்பற்றியுள்ளது. எனினும், இந்த கொடுக்கல் வாங்கலில் பல பிரச்சினைகள் இருப்பதாக முன்னாள் சிரேஸ்ட வங்கியாளரான ருசுறிபால தென்னக்கோன் தெரிவித்தார். இந்த பிரச்சினைக்கு தீர்வைக் கோரி மத்திய வங்கி ஆளுநருக்கு அவர் கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார். 10 பில்லியன் பாரிய கடனை பணிப்பாளர் சபையிலுள்ள உறுப்பினர் ஒருவரின் நிறுவனத்திற்கு வழங்கும்போது, வங்கியின் கணக்காய்வுக்குழு அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என ருசிறிபால தென்னக்கோன் குறிப்பிட்டுள்ளார். மத்திய வங்கியின் கண்காய்வு குழு தலைவராக 2010 ஆம் ஆண்டு முதல் ஜெகான் அமரதுங்க செயற்பட்டு வருகின்றார். அதன் பிரகாரம், இந்த கடனை MTD Walkers நிறுவனத்திற்கு வழங்குமாறு ஜெகான் அமரதுங்க அழுத்தம் விடுக்கவில்லை என எவ்வாறு கூறுவது என ருசிறுபால தென்னக்கோன் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய வங்கி முறிகள் மோசடியிலும் இதேபோன்றதொரு சம்பவம் இடம்பெற்றது. மத்திய வங்கி ஆளுநராக செயற்பட்ட அர்ஜூன மகேந்திரனின் மருமகனின் நிறுவனத்திற்கு நன்மை கிட்டும் வகையில் கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் வௌிக்கொணரப்பட்டது. உரிய விசாரணைகளை மேற்கொண்டு விடயங்களை ஆராய்வதற்குப் பதிலாக, முறிகள் மோசடியை பாதுகாப்பதற்கு செயற்பட்ட விதத்தைப் போன்றே ஜெஹான் அமரதுங்க தலையீடு செய்த கொடுக்கல் வாங்கலையும் நியாயப்படுத்துவதற்கு முயற்சிகள் இடம்பெறுகின்றன.