போதை வில்லைகளின் பின்னணியில் மாகந்துரே மதுஷ்

வவுனியாவில் கைப்பற்றப்பட்ட 70,000 போதைவில்லைகளின் பின்னணியில் மாகந்துரே மதுஷ்

by Staff Writer 11-08-2018 | 7:14 PM
Colombo (News 1st)  வவுனியா - செட்டிக்குளம் பகுதியில் கைப்பற்றப்பட்ட 70,000 போதை வில்லைகளின் பின்னணியில் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் மாகந்துரே மதுஷ் உள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த போதைவில்லைகள் துபாயிலிருந்து தமிழகத்தினூடாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட போதைவில்லைகள் 210 இலட்சம் ரூபா பெறுமதியானவை. குறித்த போதைவில்லைகளுடன் கைது செய்யப்பட்ட தம்பதியர், அவற்றை கொண்டுசெல்லும் நடவடிக்கையில் மட்டுமே ஈடுபட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் இருவரும் இன்று (11) அதிகாலை 4.30 மணியளவில் கைது செய்யப்பட்டதாக செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்தனர். களனி பகுதியைச் சேர்ந்த 24 மற்றும் 18 வயதான இருவரே யாழ். பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளனர். படகின் மூலம் வட மாகாணத்திற்கு கொண்டுவரப்படும் குறித்த போதைவில்லைகள், கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சந்தேகநபர்களை இன்று வவுனியா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்