பகிஷ்கரிப்பின்போது சேவையிலீடுபட்ட மேலதிக ரயில் சேவைகளும் நிறுத்தம்

பகிஷ்கரிப்பின்போது சேவையிலீடுபட்ட மேலதிக ரயில் சேவைகளும் நிறுத்தம்

பகிஷ்கரிப்பின்போது சேவையிலீடுபட்ட மேலதிக ரயில் சேவைகளும் நிறுத்தம்

எழுத்தாளர் Staff Writer

11 Aug, 2018 | 7:42 am

Colombo (News 1st) வேலைநிறுத்தத்தினை முன்னெடுத்திருந்த சந்தர்ப்பத்தில், சேவையில் ஈடுபட்ட மேலதிக ரயில் சேவைகளையும் நிறுத்தி, இன்று (11) முதல் தொடர்ச்சியான வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

ரயில்வே தொழிற்சங்கத்தினரின் தொடர் பணிபகிஷ்கரிப்பிற்கு மத்தியில் நேற்று (10), 10 ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டன.

சம்பளப் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு ரயில்வே தொழிற்சங்கத்தினர் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு, இன்று நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.

தமது கோரிக்கைக்கு உரிய தீர்வு வழங்கும் வரை பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படும் என ரயில்வே தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

இதேவேளை, ரயில்வே ஊழியர்கள் மட்டுமல்லாது அனைத்து அரச ஊழியர்களின் சம்பள திருத்தத்தை மேற்கொள்வதற்காக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அமைச்சரவையில் விசேட ஆணைக்குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை நிதியமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இதனிடையே, ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவடையும் வரை ரயில் பயணங்களில் ஈடுபடத் தயாராக வேண்டாமென போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.

ரயில்வே ஊழியர்களின் சம்பளத்தை அரச ஊழியர்களின் எம் இரண்டு ஊதியத்துக்கு இணையாக உயர்த்துமாறு வலியுறுத்தியே ரயில்வே தொழிற்சங்கத்தினர் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றுவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தைத் தயாரிக்கும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை கருத்திற்கொண்டு, எதிர்காலத்தில் குறித்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்தவேண்டிய நிலை உருவாகியுள்ளதாக பிரதியமைச்சர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்