ரயில்வே தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறது

ரயில்வே தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானம்

by Staff Writer 10-08-2018 | 3:27 PM
Colombo (News 1st)  தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக ரயில்வே தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இன்று நண்பகல் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்தார். பேச்சுவார்த்தைக்காக ரயில் ஊழியர்கள், பாதுகாவலர்கள் மற்றும் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் தொழிற்சங்க பிரதிநிதிகள் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சம்பள கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரி ரயில்வே தொழிற்சங்கத்தினர் நேற்று முன்தினம் (08) முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். எவ்வாறாயினும் , ரயில் இயந்திர பரிசோதகர்களை ஈடுபடுத்தி 10 ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது. மாத்தறை, காலி, கண்டி, சிலாபம் , இறம்புக்கன மற்றும் மஹவ ஆகிய பகுதிகளுக்கு இந்த ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது. இதேவேளை, பிரதான ரயில் மார்க்கத்தில் ரயில் சேவையை வழமைக்கு கொண்டுவர அனைத்து முயற்சிகளையும் எடுப்பதாக மேலதிக ரயில்வே பொது முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்தார். பயணிகளின் அசௌகரியங்களைக் குறைப்பதற்காக பாடசாலை பஸ் சேவைக்காக 500 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. நாளாந்த பஸ் சேவைக்கு மேலதிகமாக 100 பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பிரச்சினைகள் இருப்பின் 011 755 55 55 என்ற தொலைபேசி இலக்கம் மூலம் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, ரயில் போக்குவரத்தை அத்தியாவசிய சேவையாக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான வர்த்தமானி தயாரிக்கப்படுவதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க குறிப்பிட்டார். மக்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.