by Staff Writer 10-08-2018 | 8:12 PM
Colombo (News 1st) முல்லைத்தீவு மாவட்டத்தில் இல்மனைற் அகழ்வது தொடர்பாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரனால் நியமிக்கப்பட்ட குழு இன்று (10) கூடியது.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர், வட மாகாண விவசாய அமைச்சர் க. சிவனேசன், வட மாகாண சபை உறுப்பினர்களான து. ரவிகரன், பொ. ஐங்கரநேசன், கரைத்துறைப்பற்று பிரதேச சபை செயலாளர் எஸ். தவராசா, கனியவளங்கள் திணைக்கள பணிப்பாளர், பேராசிரியர் கந்தசாமி, மாகாண விவசாய பணிப்பாளர் சிவகுமார் மற்றும் கொக்கிளாய் மீனவ சங்கத் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
கடந்த ஜூன் மாதம் 25 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இல்மனைற் தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தினையடுத்து, இது குறித்து ஆராய்வதற்காக வட மாகாண முதலமைச்சரினால் இந்தக் குழு நியமிக்கப்பட்டது.
இல்மனைற் தொடர்பாக ஆராய்வதற்காக வட மாகாண சபை சார்பில் 7 பேர், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு சார்பில் 5 பேர் , மாவட்ட செயலகத்தின் ஊடாக மூவர், குறித்த பிரதேச சபையின் ஊடாக இருவர் உள்ளடங்கலாக 17 பேர் கொண்ட குழுவை நியமிப்பதற்கு கடந்த ஜூன் மாதம் 25 ஆம் திகதி தீர்வு எட்டப்பட்டது.