யேமன் குண்டுவீச்சில் 29 குழந்தைகள் பலி!

யேமனில் குழந்தைகள் பயணித்த பஸ் மீது குண்டுவீச்சு: 29 குழந்தைகள் பலி

by Bella Dalima 10-08-2018 | 4:57 PM
உள்நாட்டுப் போர் தீவிரமாக நடைபெற்று வரும் யேமனில் குழந்தைகள் பயணித்த பேருந்து மீது விமானம் மூலம் குண்டுகளை வீசி தாக்கியதில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. யேமனில் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுதி புரட்சிப்படையினர் கடந்த 2 வருடங்களாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் சனா உள்ளிட்ட சில பகுதிகளைத் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். சர்வதேச ஆதரவு பெற்றுள்ள யேமன் அரசாங்கத்திற்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவளித்து வருகின்றன. அவர்கள் ஹவுதி கிளர்ச்சியாளர்களை இலக்கு வைத்து விமானத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்தத் தாக்குதலில் சில நேரங்களில் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்படுகின்றனர். இதற்கிடையே, யேமனின் வட மேற்கு பகுதியில் அமைந்துள்ள சடா நகரில் ஹவுதி புரட்சிப் படையினரை இலக்கு வைத்து சவுதி கூட்டுப்படைகள் நேற்று (09) விமானத் தாக்குதல் நடத்தின. இதில் பஸ்ஸில் சென்ற 12 குழந்தைகள் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. ஆனால், தற்போது குறித்த பஸ்ஸில் பயணம் செய்த 29 குழந்தைகளும் தாக்குதலில் உயிரிழந்ததாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. 2015-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் யேமன் உள்நாட்டு போரில் இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.