அரச காணியிலிருந்து வெளியேறுமாறு 62 குடும்பங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரிக்கப்பட்டது
by Staff Writer 10-08-2018 | 8:47 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - நாவற்குழி தேசிய வீடமைப்பு அதிகார சபையின் காணியில் குடியேறியுள்ள மக்களை அரச காணியிலிருந்து வெளியேறுமாறு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (10) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
தனித்தனியாக 62 குடும்பங்கள் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில், இன்றைய தினம் 34 வழக்குகள் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன.
எதிர்மனுதாரர்கள் சார்பாக சட்டத்தரணிகளான எம்.ஏ. சுமந்திரன், கேசவன் சயந்தன், நி. கேசாந் ஆகியோர் ஆஜராகினர்.
இதன்போது, வீடமைப்பு அதிகார சபைக்குப் பொறுப்பான அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம் இது தொடர்பாக வினவியபோது, பொதுமக்களை அரச காணிகளிலிருந்து வெளியேற்றுவது அரசின் கொள்கை அல்ல என தெரிவித்திருந்ததையும் இந்த காலப்பகுதிக்குள் அமைச்சருடன் கலந்துரையாடி தீர்க்கமான முடிவுகளை எட்ட முடியும் என்பதையும் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் நீதிமன்றின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.
அதனைக் கவனத்திற்கொண்டு பதில் நீதவான் செ. கணபதிப்பிள்ளை, எதிர்வரும் நவம்பர் மாதம் 9 ஆம் திகதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.