சினை பசுக்கள் இறக்குமதி திட்டத்தில் முறைகேடு

சினை பசுக்களை இறக்குமதி செய்யும் திட்டத்தில் முறைகேடு

by Bella Dalima 09-08-2018 | 9:59 PM
Colombo (News 1st)  உள்நாட்டு பசும்பால் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படும் சினை பசுக்களை இறக்குமதி செய்யும் திட்டம் பசும்பால் உற்பத்தியை அபாயத்தில் ஆழ்த்துவதாக கணக்காய்வாளர் நாயகம் கடந்த மே மாதம் அறிக்கையொன்றை வௌியிட்டு தௌிவுபடுத்தியிருந்தார். இறக்குமதி செய்யப்பட்ட பசுக்களின் குருதி மாதிரிகளை பரிசோதனை செய்து, தீர்மானித்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையை உறுதிப்படுத்தும் வகையில், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் சில அறிக்கைகளை வௌியிட்டிருந்தது. நெதர்லாந்து வங்கியொன்று வழங்கும் 73 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் திட்டத்தின் கீழ் 2 வருடங்களுக்குள் அவுஸ்திரேலியாவிலிருந்து 20,000 சினைப் பசுக்களை இறக்குமதி செய்வதே கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் இலக்காகும். இந்த திட்டத்தின் கீழ் ஏற்கனவே 5,000 பசுக்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. முதல் திட்டத்தின் வெற்றிக்கு அமைய, எஞ்சிய 15,000 பசுக்களையும் இறக்குமதி செய்வதாக அப்போதைய விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர், அமைச்சரவையில் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட பசுக்கள் ஈன்ற கன்றுகளில் 61 வீதமானவை உயிரிழந்த நிலையிலும், இந்த பசுக்களில் இருந்து நாளொன்றுக்கு தலா அரை லிட்டர் தொடக்கம் 8 லிட்டர் வரை பால் கரக்கக்கூடிய நிலையிலும், அமைச்சு எஞ்சிய 15,000 பசுக்களையும் ஒரே தடவையில் இறக்குமதி செய்வதற்கான முற்பணத்தை செலுத்தியுள்ளது. இதன் பிரகாரம், 8.3 மில்லியன் அமெரிக்க டொலரையும் விட அதிக தொகை முற்பணமாக செலுத்தப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டிற்காக கிராமிய பொருளாதார அமைச்சிற்கு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட நிதியில் பசுக்களை இறக்குமதி செய்வதற்காக ஒரு சதமேனும் ஒதுக்கப்படவில்லை. 8.3 மில்லியன் அமெரிக்க டொலரை செலுத்துவதற்காக அமைச்சு, குறை நிரப்பு பிரேரணையொன்றையேனும் பாராளுமன்றில் சமர்ப்பிக்கவில்லை. அமைச்சின் முக்கிய நிதி அதிகாரமுள்ள அதிகாரியான செயலாளர், பிரதமரின் செயலாளரின் மனைவியாவார். எதிர்வரும் 16 ஆம் திகதி ஓய்வு பெறவுள்ள அவர், வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்படாத நிலையில், குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பித்து நிதிக்கான அனுமதியைப் பெறாமல், 8.3 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் மேற்பட்ட தொகையை முற்பணமாக செலுத்தியதன் மூலம் பாராளுமன்றத்திற்கு மாத்திரமுள்ள நிதி அதிகாரத்தை தவறாகக் கையாண்டுள்ளார்.