பனலிய ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நஷ்டஈடு

பனலிய ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நஷ்டஈடு

by Staff Writer 08-08-2018 | 11:17 AM
Colombo (News 1st) மலையக மார்க்கத்தில் றம்புக்கனை மற்றும் பொல்கஹவெல இடையே பனலிய பகுதியில் ஏற்பட்ட ரயில் விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு நஷ்டஈடு பெற்றுக்கொடுப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. விபத்தில் காயமடைந்த 32 பேர் தொடர்பான அறிக்கைகளை வழங்குமாறு, அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலைகளில் கோரப்பட்டுள்ளதாக ரயில்வே ​மேலதிக பொது முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர்கள் குருணாகல், பொல்கஹவெல, றம்புக்கனை மற்றும் கேகாலை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவர்களின் நிலை தொடர்பில் ஆராய்வதற்காக ரயில்வே திணைக்களத்தின் அதிகாரிகள் இன்று (08) குறித்த வைத்தியசாலைகளுக்கு சென்றதாக விஜய சமரசிங்க ​மேலும் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் (06) மாலை இடம்பெற்ற இந்த ரயில் விபத்தினால் தண்டவாளத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டிருந்த நிலையில், நேற்று (07) மாலை தொழிநுட்ப குழுவினரால் தண்டவாளம் திருத்தப்பட்டது. இதேவேளை, விபத்து தொடர்பில் மூவரடங்கிய குழுவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மேலும், விசாரணைக் குழுவின் அறிக்கை கிடைக்கும் வரை, பின்புறமாக வந்த ரயிலின் சாரதி மற்றும் உதவியாளர், ஒழுங்குபடுத்தல் உத்தியோகத்தர் ஆகியோரின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.