ஓர் சகாப்தத்தின் இறுதிப் பக்கங்கள்

ஓர் சகாப்தத்தின் இறுதிப் பக்கங்கள்...

by Bella Dalima 08-08-2018 | 7:07 PM
மறைந்த தி.மு.க. தலைவர் மு. கருணாநிதியின் இறுதிச்சடங்குகள் இன்று (08) மாலை இடம்பெற்றன. ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு பொதுமக்களும் அரசியல் தலைவர்களும் முக்கியஸ்தர்களும் அஞ்சலி செலுத்தியதையடுத்து, மெரினாவில் அமைந்துள்ள அண்ணா சதுக்கம் நோக்கி மாலை 4 மணியளவில் அவரது இறுதி ஊர்வலம் ஆரம்பமானது. அலங்கரிக்கப்பட்ட இராணுவ வாகனத்தில் கருணாநிதியின் உடல் ஏற்றப்பட்டு, சன நெரிசலுக்கு மத்தியில் இறுதி ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது. இதனையடுத்து, அண்ணா சமாதிக்கு பின்புறமாக கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. கருணாநிதியை நல்லடக்கம் செய்த பேழையில்,
''ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ, ஓய்வு கொண்டிருக்கிறான்''
என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும் தமிழக முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான கருணாநிதி உடல் நலக்குறைவால் நேற்று (07) மாலை காலமானார். இதனையடுத்து, அவரை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்ய அனுமதி வழங்குமாறு கோரி தி.மு.க. தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால், மெரினாவில் நினைவிடம் ஒதுக்குவதில் பல சட்ட சிக்கல்கள் உள்ளதால், சென்னை காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்க அரசு தயாராக இருப்பதாக தலைமை செயலாளர் அறிவித்தார். எனினும், தமிழக அரசின் இந்த அறிவிப்பிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றில் தி.மு.க. சார்பில் முறைப்பாடு முன்வைக்கப்பட்டது. இந்த முறைப்பாட்டு மனு மீது இன்று விசாரணை இடம்பெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர். இதனையடுத்து, அவரின் உடல் மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. காலத்தை வென்ற கலைஞனின் வாழ்க்கை வரலாறும் அரசியலும் தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருக்குவளை என்ற கிராமத்தில் 1924 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் திகதி நாட்டு வைத்தியர் முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மூன்றாவது மகனாகப் பிறந்தார் கருணாநிதி. பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் தட்சிணாமூர்த்தி. திருக்குவளை தொடக்கப்பள்ளியிலும் திருவாரூர் உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார். பள்ளிப்பருவத்திலேயே நாடகம், கவிதை, பேச்சு, விளையாட்டு என அனைத்திலும் தீவி​ர ஈடுபாடு கொண்டிருந்தார். 1916 ஆம் ஆண்டு டாக்டர் டி.எம். நாயர் மற்றும் தியாகராயர் ஆகியோரால் நிறுவப்பட்ட நீதிக்கட்சி, பிரமாண எதிர்ப்பை முன்னிறுத்தி தீவிரமாக செயற்பட்டுக் கொண்டிருந்தது. கட்டாய இந்தி திணிப்பிற்கு எதிராகவும் இக்கட்சி போராடியது. மாணவர்கள் மத்தியில் இக்கட்சிக்கு பெரும் வரவேற்பு இருந்தது. கருணாநிதியும் இந்தக் கட்சியின்பால் ஈர்க்கப்பட்டார். மாணவப் பருவத்திலேயே இளைஞர்களை ஈர்க்கும் வகையில் பேசும் ஆற்றல் மிகுந்தவராகத் திகழ்ந்தார் கருணாநிதி. இவர் உருவாக்கிய தமிழ்நாடு மாணவர் மன்றம் திராவிட இயக்கத்தின் முதல் மாணவர் அணி என்ற சிறப்பைப் பெற்றது. க. அன்பழகன், இரா. நெடுஞ்செழியன், மதியழகன் உள்ளிட்டோரும் இந்த அணியில் இணைந்து செயற்பட்டார்கள். 1942 இல் அறிஞர் அண்ணா நடத்திய திராவிட நாடு பத்திரிகையில் கருணாநிதி எழுதிய `இளமைப்பலி' என்ற படைப்பு வெளியானது. அப்படைப்பு அண்ணாவை பெரிதும் கவர, திருவாரூரில் ஒரு விழாவிற்காக சென்றிருந்த அவர், கருணாநிதியை அழைத்துப் பாராட்டினார். அதன்பிறகு இன்னும் தீவிரமாக செயற்படத் தொடங்கினார் கருணாநிதி. துண்டுப் பிரசுரங்கள், வெளியீடுகள் மூலம் பிரசாரம் செய்து வந்த கருணாநிதி, தன் பிரசாரத்திற்கென ஒரு அச்சிதழ் தொடங்கும் தேவையை உணர்ந்து 1942, ஆகஸ்ட் மாதம் `முரசொலி' பத்திரிகையைத் தொடங்கினார். தொடக்கத்தில் வார இதழாக வெளிவந்த இந்த பத்திரிகை, 1960 செப்டம்பர் முதல் நாளேடாக மாற்றப்பட்டது. `சேரன்', `மறவன் குரல்' போன்ற பெயர்களில் தொடக்கத்தில் அனல் தெரிக்கும் கட்டுரைகளை எழுதினார் கருணாநிதி. பிற்காலத்தில் இது, உடன்பிறப்புகளுக்கான கடிதமாக மாறியது. அக்கடிதம் தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றது. காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக செயற்பட்ட தந்தை பெரியார், அக்கட்சித் தலைவர்கள் மத்தியில் மேலோங்கியிருந்த இந்து சனாதனக் கோட்பாடுகளால் வெறுப்புற்று 1925 இல் அக்கட்சியில் இருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். இவ்வியக்கம் 1941 இல் திராவிடர் கழகம் என்ற அமைப்பாக மாற்றப்பட்டது. அறிஞர் அண்ணா, கருணாநிதி போன்றோர் அந்த இயக்கத்தில் இணைந்து தீவிரமாக செயற்பட்டார்கள். தந்தை பெரியாருக்கும் அறிஞர் அண்ணா மற்றும் முன்னணி தலைவர்களுக்குமிடையே சில கருத்து மாறுபாடுகள் ஏற்பட்டதால், அவர்கள் திராவிடர் கழகத்திலிருந்து விலகி 1949, செப்டெம்பர் 17 இல் திராவிட முன்னேற்றக்கழகத்தைத் தொடங்கினர். அறிஞர் அண்ணா, அதன் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கருணாநிதி கொள்கை பரப்புக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கருணாநிதி முழுமையாகப் பங்கேற்றார். திருச்சி அருகே உள்ள கல்லக்குடி என்ற ஊரின் பெயரை டால்மியாபுரம் என்று மாற்றியதைக் கண்டித்து, 1953 ஜூலை 15 இல் கருணாநிதி ரயில் மறியல் போராட்டம் நடத்தினார். இந்தப் போராட்டம் கருணாநிதிக்கு பெரும் அரசியல் அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்தது. 1957 அக்டோபர் 13 ஆம் திகதி இந்தி எதிர்ப்பு நாளாக கடைப்பிடிக்கப்பட்டது. அதற்கு தலைமை தாங்கினார். சட்ட எரிப்புப் போராட்டம் நடத்தி சிறைக்கும் சென்றார். தமிழகத்தின் ஒப்பற்ற தலைவரானார்  1957 இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் குளித்தலை தொகுதியிலும் 1962 இல் தஞ்சாவூர் தொகுதியிலும் 1967, 1971 தேர்தல்களில் சைதாப்பேட்டை தொகுதியிலும் 1977, 1980 தேர்தல்களில் அண்ணா நகர் தொகுதியிலும் 1989, 1991 தேர்தல்களில் துறைமுகம் தொகுதியிலும் 1996, 2001, 2006 தேர்தல்களில் சேப்பாக்கம் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார் கருணாநிதி. 2011, 2016 சட்டமன்றத் தேர்தல்களில் திருவாரூர் தொகுதியிலும் போட்டியிட்டு ஜெயித்தார். 2016 தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த வேட்பாளர் பன்னீர்செல்வத்தை 68,366 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இது மாநிலத்திலேயே அதிக வாக்கு வித்தியாசமாகும். 1969-1971, 1971-1976, 1989-1991, 1996-2001, 2006-2011 ஆகிய காலக்கட்டங்களில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டு தமிழக முதல்வராக பொறுப்பு வகித்தார் கருணாநிதி. இரண்டு முறை இவரது ஆட்சியை மத்திய அரசு கலைத்துள்ளது. 1972 அக்டோபர் 14 இல் கட்சிப் பொருளாளராக இருந்த நடிகர் எம்.ஜி.ஆர், தி.மு.க.விலிருந்து வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினார். இது, கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய பிளவாகும். 1983இல் ஈழத்தமிழர் பிரச்சினையில் இந்திய, தமிழ்நாடு அரசுகளின் நிலைப்பாட்டைக் கண்டித்து கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் தங்களது சட்டப்பேரவை உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்தனர். இந்தியைத் திணிக்கும் அரசியல் சட்ட நகலை எரித்ததற்காக 1986 டிசம்பரில் கருணாநிதி உள்ளிட்ட 10 தி.மு.க. பேரவை உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. விமர்சனங்களுக்கு முகங்கொடுத்த கருணாநிதி கருணாநிதி மீது வைக்கப்படும் முக்கிய விமர்சனம், குடும்ப அரசியல் என்பதாகும். தமிழகத்தின் வலுவான அரசியல் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம், பல தருணங்களில் மத்திய அரசைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கியிருக்கிறது. அத்தருணங்களில் மாநில நலனைக் காட்டிலும் தம் குடும்ப நலனையே கருத்திற்கொண்டு செயற்பட்டார் என்ற விமர்சனமும் இவர் மீது உண்டு. இலங்கையில் இறுதி யுத்தம் நடந்தபோது உயிருக்குப் போராடிய தமிழர்களைக் காப்பாற்ற போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் இவர் மீது உண்டு. யுத்தம் தீவிரமாக நடந்து கொண்டிருந்தபோது மெரினாவில் இவர் இருந்த சிலமணி நேர உண்ணாவிரதமும் விமர்சனத்திற்கு உள்ளாகியது. 90 வயதைக் கடந்த பின்னும் சற்றும் உற்சாகம் குறையாமல் அன்றாட அலுவல்களைக் கவனித்து வந்தார். அரசியல் சார்ந்த கூட்டங்கள், முடிவுகள், பிரசாரம் என அவரது உழைப்பு இளம் தலைமுறைக்கு பாடமாக அமைந்துள்ளது. பல முற்போக்கு, முன்னேற்றத் திட்டங்கள் அவரது ஆட்சிக்காலத்தில் செயற்படுத்தப்பட்டவை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. தமிழக அரசியல், கலை, சினிமா என சகல துறைகளிலும் ஒப்பற்றவராகத் திகழ்ந்து, தமிழுக்கு தன்னிகரில்லாத் தொண்டாற்றிய கலைஞரின் வாழ்வு போற்றுதற்குரியதே!  
''தானே எழுத்தாகி, தானே சொல்லாகி, தானே பொருளாகி, தானே யாப்புமாகி, தானே அணியுமாகி, மொழியாய், மொழி வளமாய், கவிதையாய் தன்னை தானே எழுதிக்கொண்ட அழகான கவிதை கலைஞர்''
- இளையராஜா   தந்தைக்கு மகன் எழுதிய கடிதம்...