விசாரணை என்ற பெயரில் ஒருவரை அடித்துக்கொன்ற இராணுவத்தினர் இருவருக்கு மரண தண்டனை

விசாரணை என்ற பெயரில் ஒருவரை அடித்துக்கொன்ற இராணுவத்தினர் இருவருக்கு மரண தண்டனை

விசாரணை என்ற பெயரில் ஒருவரை அடித்துக்கொன்ற இராணுவத்தினர் இருவருக்கு மரண தண்டனை

எழுத்தாளர் Staff Writer

08 Aug, 2018 | 3:29 pm

Colombo (News 1st)  யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் விசாரணை என்ற பெயரில் ஒருவரை அழைத்துச்சென்று, கொலை செய்த குற்றத்திற்காக இரண்டு இராணுவத்தினருக்கு மரண தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கு இன்றைய தினம் திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட திருநெல்வேலியில் கடந்த 1998 செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி ஞானசிங்கம் அன்ரன் குணசேகரம் என்பவரை விசாரணைகளுக்காக அழைத்துச்சென்று அடித்துக் கொலை செய்ததாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் லெப்டினன்ட் கேர்ணல் ரொனி பெத்தலிஸ், மேஜர் டிக்சன் ராஜமந்திரி மற்றும் கேர்ணல் பியதாசகே பிரியந்த ராஜகருணா ஆகியோருக்கு எதிராகவே குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்த வழக்கில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட இரண்டாவது எதிரியான மேஜர் டிக்சன் ராஜமந்திரி மற்றும் மூன்றாவது எதிரியான பியதாசகே பியந்த ராஜகருணா ஆகிய இராணுவத்தினருக்கே நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மரண தண்டனை விதித்துள்ளார்.

குறித்த வழக்கு விசாரணைகள் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, எதிரிகளான இராணுவத்தினருக்கு பாதுகாப்பு இல்லை என தெரிவித்து மேன் முறையீட்டு நீதிமன்றின் அனுமதியுடன் வழக்கு அநுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

மேலும், மேன்முறையீட்டு நீதிமன்றின் உத்தரவின் பேரில் திருகோணமலை மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு அங்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

கொலை செய்யப்பட்டவரின் உடலில் 21 இடங்களில் காயங்கள் இருந்ததாக சட்ட வைத்திய அதிகாரி வழக்கு விசாரணைகளின்போது தெரிவித்துள்ளார்.

எனினும், குறித்த நபர் மாடியிலிருந்து வீழ்ந்து மரணித்ததாக இராணுவத் தரப்பினர் பொலிஸாரிடம் தெரிவித்ததாகவும் இராணுவத்திற்கும் கொலைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் இராணுவத்தினர் மன்றில் வாக்குமூலம் வழங்கினர்.

இந்த வழக்கின் முதலாவது எதிரியான ரொனி பெத்தமிஸ் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்