சி.வி. விக்னேஷ்வரனையும் 2 மாகாண அமைச்சர்களையும் நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவிப்பு

சி.வி. விக்னேஷ்வரனையும் 2 மாகாண அமைச்சர்களையும் நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவிப்பு

சி.வி. விக்னேஷ்வரனையும் 2 மாகாண அமைச்சர்களையும் நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

08 Aug, 2018 | 7:39 pm

Colombo (News 1st)  வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரனையும் இரண்டு மாகாண அமைச்சர்களையும் எதிர்வரும் செப்டம்பர் 7 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இன்று அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் வட மாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் தாக்கல் செய்துள்ள மனுவொன்றை பரிசீலித்தபோதே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக தண்டனை விதிக்காதிருப்பதற்கு செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி மன்றில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் மற்றும் மாகாண அமைச்சர்களான அனந்தி சசிதரன் , கே.சிவநேசனுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்தல் பிறப்பித்துள்ளது.

வட மாகாண மீன்பிடி,போக்குவரத்து, வர்த்தக வாணிப மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சராக செயற்பட்ட பா,டெனீஸ்வரனுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவாகியிருந்தன.

இதனையடுத்து, பா.டெனீஸ்வரன் கடந்த ஆகஸ்ட் மாதம் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

இதன் பின்னர் வட மாகாண மீன்பிடி,போக்குவரத்து, வர்த்தக வாணிப மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சராக செயற்பட்ட
பா.டெனீஸ்வரன், பதவி நீக்கப்பட்டதையடுத்து அந்த அமைச்சு வட மாகாண முதலமைச்சரினால் திணைக்கள ரீதியாக பிரித்து வழங்கப்பட்டது.

அதன் பிரகாரம், போக்குவரத்து அமைச்சு வடமாகாண முதலமைச்சருக்கும் வர்த்தக வாணிப அமைச்சு அனந்தி சசிதரனுக்கும் மீன்பிடி அமைச்சு க.சிவநேசனுக்கும் வழங்கப்பட்டது.

எனினும், அமைச்சு பதவியில் இருந்து தன்னை நீக்கிய விதம் சட்டத்திற்கு முரணானது என தெரிவித்து பா.டெனீஸ்வரன் மேன்முறையீடு செய்திருந்தார்.

வட மாகாண கடற்றொழில் அமைச்சு பதவியிலிருந்து தம்மை நீக்கியமை சட்டத்திற்கு புறம்பானது என பா.டெனீஸ்வரன் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் உயர்நீதிமன்றத்தில் ரீட் மனு தாக்கல் செய்தார்.

வட மாகாண போக்குவரத்து, மீன்பிடி மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சு பதவியிலிருந்து பா.டெனிஸ்வரனை நீக்கியமையை தடை செய்து கடந்த ஜூன் மாதம் 29 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, தான் வகித்த அமைச்சுப் பொறுப்புக்களையும் அது சார் ஆவணங்களையும் உடனடியாக தன்னிடம் மீண்டும் வழங்குமாறு கோரி கடந்த ஜூன் மாதம் 7 ஆம் திகதி வட மாகாண சபை உறுப்பினர் பா.டெனீஸ்வரன் வடமாகாண முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதைத் தொடர்ந்து இந்த மேன்முறையீட்டு மனு ஜூலை மாதம் 9 ஆம் திகதி மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது, இடைக்கால தடையுத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஜூலை மாதம் 24 ஆம் திகதி வரை நீடித்திருந்தது.

அமைச்சர் டெனீஸ்வரனின் மேன்முறையீடு தொடர்பில் ஆட்சேபனை இருப்பின் ஜூலை 23 ஆம் திகதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு வட மாகாண முதலமைச்சர், பிரதிவாதிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்திருந்தனர்.

இந்நிலையில், வட மாகாண அமைச்சரவையைக் கூட்டுவதில் பல்வேறு இழுபறிகள் காணப்பட்டதுடன், தனது அனுமதியின்றி வட மாகாண அமைச்சரவையைக் கூட்ட வேண்டாம் என வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது .

வட மாகாண சபையின் பதவிக்காலம் இந்த வருடம் ஒக்டோபர் 25 ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

இந்நிலையில், முதலமைச்சர் மற்றும் இரண்டு அமைச்சர்களுக்கு செப்டம்பர் 7 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இன்று அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்