by Bella Dalima 07-08-2018 | 7:46 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - சுழிபுரத்தைச் சேர்ந்த சிறுமி ரெஜினாவின் கொலை தொடர்பான வழக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் இன்று (07) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமி ரெஜினாவின் குடும்பத்தார் சார்பாக சட்டத்தரணி கே. சுகாஷ் மன்றில் ஆஜராகியிருந்தார்.
இன்று மன்றில் ரெஜினாவின் பள்ளித்தோழியும் ரெஜினாவின் வீட்டிற்கு அருகில் உள்ள பெண்மணி ஒருவரும் சாட்சியமளித்தனர்.
சிறுமி ரெஜினாவின் தோழி, அவர் இறப்பதற்கு முன்னர் தனது வீடு வரை வந்து தன்னை வீட்டில் விட்டுவிட்டே சென்றதாக மன்றில் சாட்சியமளித்துள்ளார்.
அத்துடன், இன்று மன்றில் சாட்சியமளித்த ரெஜினாவின் வீட்டிற்கு அருகில் உள்ள பெண்மணி, சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் மாத்திரமே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் இருவர் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இதன்போது, சம்பவம் தொடர்பில் ஏனைய இரண்டு சந்தேகநபர்களையும் கைது செய்யுமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
இதேவேளை, கொலை தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
யாழ். சுழிபுரம் - காட்டுப்புலம் பகுதியில் 6 வயதான சிவனேஸ்வரன் ரெஜினா கடந்த ஜீன் மாதம் 25 ஆம் திகதி பாழடைந்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
குறித்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு, கழுத்து நெரித்து கொல்லப்பட்டமை பிரேதப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.