பனலிய ரயில் விபத்து: நால்வர் இடைநிறுத்தம்

பனலிய ரயில் விபத்து: சாரதி உள்ளிட்ட நால்வர் சேவையிலிருந்து இடைநிறுத்தம்

by Staff Writer 07-08-2018 | 8:17 PM
Colombo (News 1st)  பனலிய பிரதேசத்தில் இடம்பெற்ற ரயில் விபத்து தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை கிடைக்கும் வரை ரயிலின் சாரதி, உதவியாளர், ஒழுங்குபடுத்தல் உத்தியோகத்தர் மற்றும் உதவி ஒழுங்குபடுத்தல் உத்தியோகத்தர் ஆகியோரின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது. நேற்று (06) மாலை இடம்பெற்ற இந்த ரயில் விபத்தில் 32 பேர் காயமடைந்தனர். கொழும்பு கோட்டையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த அலுவலக ரயில் தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளாகியமையினால், பொல்கஹவெல மற்றும் றம்புக்கணைக்கு இடையிலான பனலிய ரயில் நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டது. பனலிய ரயில் நிலையத்திலிருந்து 1 கிலோமீட்டர் தூரத்தில் இந்த ரயில் நிறுத்தப்பட்டது. கொழும்பு கோட்டையில் இருந்து றம்புக்கணை வரை பயணித்த இயந்திரப்பெட்டி மற்றுமொரு ரயிலுடன் பின்புறமாக ​மோதியது. கொழும்பு கோட்டையில் இருந்து பல்லேவல வரை ரயில் சமிக்ஞை கொழும்பு பிரதான கட்டுப்பாட்டு நிலையத்தினாலேயே செயற்படுத்தப்படுகின்றது. பல்லேவலயில் இருந்து ஏனைய பிரதேசங்களுக்கான சமிக்ஞையை பொல்கஹவெல ரயில் நிலையமே செயற்படுத்துகின்றது. நேற்று (06) இடம்பெற்ற விபத்து தொடர்பில் மூவரடங்கிய குழுவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், தவறிழைத்தவர் எவராயினும் தராதரம் பாராமல் தண்டனை வழங்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் சேதமடைந்த மலையக ரயில் மார்க்கத்தை திருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளன. திருத்தப்பணிகள் நிறைவடையும் வரை ஒரு வழிப்பாதையில் போக்குவரத்து இடம்பெற்றது. விபத்திற்குள்ளான 164 இயந்திர இலக்கம் கொண்ட ரயில் 2011 ஆம் ஆண்டும் அலவ்வ ரயில் நிலையத்தில் விபத்திற்குள்ளாகியது.