அரசியல்வாதிகள் நாட்டிற்காக சேவையாற்ற வேண்டும்

அரசியல்வாதிகள் நாட்டிற்காக சேவையாற்ற வேண்டும் - அபான்ஸ் குழுமத் தலைவி தெரிவிப்பு

by Staff Writer 07-08-2018 | 8:31 PM
Colombo (News 1st)  பெண்கள் வீட்டிற்குள் முடங்கிக்கிடந்த யுகத்திற்கு அபான் பெஸ்டோன்ஜி (Aban Pestonjee) போன்றோர் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். அபான்ஸ் குழுமத்தின் தலைவியும் நிறுவுநருமான அபான் பெஸ்டோன்ஜி, வீட்டிற்குள் முடங்கியிருந்த பெண்களின் வாழ்வியலை பிரகாசப்படுத்தியுள்ளார். பெண்களின் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைப்பின் ஏற்பாட்டில் அண்மையில் நடைபெற்ற விருது வழங்கல் விழாவில் 2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த பெண் தொழில் முனைவர் விருதை அபான் பெஸ்டோன்ஜி, பிரதமரிடமிருந்து பெற்றுக்கொண்டார். 1968 ஆம் ஆண்டில் வர்த்தகத்துறையில் காலடி எடுத்துவைத்த அபான் பெஸ்டோன்ஜி, தனது முதலாவது வர்த்தக நிலையத்தை பம்பலப்பிட்டியில் ஆரம்பித்தார். 1960களில் இலங்கை மூடிய பொருளாதாரக் கொள்கைக்குள் அடங்கியபோது, திருமதி பெஸ்டோன்ஜி பாவனைக்குட்படுத்தப்பட்ட வீட்டுப்பாவனைப் பொருட்களை இராஜதந்திர சமூகத்திடமிருந்து ஏலத்தில் பெற்றுக்கொண்டார். எப்போதும் நுகர்வோரின் திருப்தி தொடர்பில் திருமதி பெஸ்டோன்ஜி அதிகமாக அவதானம் செலுத்தினார். மூடிய பொருளாதாரக் கொள்கையில் பெற்றுக்கொள்ள முடியாத சில உதிரிப்பாகங்களை வழங்குவதற்கான அலகுகளை திருமதி பெஸ்டோன்ஜி ஒதுக்கினார். இதுவே உலகில் உள்ள பிரபல்ய வீட்டுப்பாவனை பொருள் உற்பத்தி நிறுவனங்கள், திருமதி பெஸ்டோன்ஜிக்கு தமது உற்பத்திகளை வழங்கி அவரை ஊக்குவிக்க முடிவெடுத்தமைக்கான முக்கிய காரணமாகும். சிறிய வர்த்தக நிலையமாக பம்பலப்பிட்டியவில் ஆரம்பித்த குறித்த உற்பத்தி நிறுவனம், 500-ற்கும் மேற்பட்ட கிளைகளுடன் வீட்டு உபகரணங்கள் உற்பத்தி அபிவிருத்தித்துறையில் கோலோச்சியுள்ளது. அரசியல்வாதிகள் அரசியல் செய்வதை நிறுத்தி விட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே திருமதி பெஸ்டோன்ஜியின் கருத்தாக அமையப்பெற்றுள்ளது.
பெண்கள் வர்த்தகத்துறைக்குள் பிரவேசிக்க வேண்டுமானால், அவர்கள் அது தொடர்பில் ஆர்வம் கொண்டிருக்க வேண்டும். பணம் ஈட்டுவதற்காக மாத்திரமின்றி அதையும் தாண்டி ஆர்வம் கொள்ள வேண்டும். அரசியல்வாதிகள் அரசியலை விட்டுக்கொடுத்து நாட்டிற்காக உழைக்க வேண்டும்
என்கிறார் திருமதி பெஸ்டோன்ஜி.