தொழிற்படாத ஒலுவில் வர்த்தகத் துறைமுகம்

தொழிற்படாத ஒலுவில் வர்த்தகத் துறைமுகம்: சவால்களுக்கு முகங்கொடுக்கும் மீனவர்கள்

by Bella Dalima 04-08-2018 | 10:44 PM
Colombo (News 1st)   ஒலுவில் துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கு 46.1 மில்லியன் யூரோவை வட்டியில்லாக் கடனாக டென்மார்க் அரசு இலங்கைக்கு வழங்கியது. ஒலுவில் துறைமுக வளாகத்திற்குள் வர்த்தகம் மற்றும் மீன்பிடித் தேவைகளுக்கென இரண்டு துறைமுகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடற்றொழிலுக்குப் பயன்படுத்தப்படும் சுமார் 300-க்கும் அதிகமான படகுகள் இந்தப் பகுதியிலேயே நிறுத்தி வைக்கப்படுகின்றன. மீன்பிடித் துறைமுகத்தில் கடலுக்குள் நுழையும் முகப்புப் பகுதியில் மண் மூடியுள்ளமையால், படகுகளை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மீன்பிடித்துறைமுகத்தில் தரித்து நின்ற பாரியளவிலான படகுகள் வர்த்தகத் துறைமுகப் பகுதியில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எனினும், வர்த்தகத் துறைமுகத்தின் முகப்புப் பகுதியினையும் மண் மூடியுள்ளமையால் தொழிலை முன்னெடுக்க முடியாதுள்ளதாக மீனவர்கள் கூறினர். இதேவேளை, துறைமுகத்திற்கு வடக்கு பக்கமாகவுள்ள கரையோரப் பகுதியில் நில அரிப்பு அதிகரித்து வருவதாக மக்கள் தெரிவித்தனர். இந்த கடலரிப்பு காரணமாக 150 மீட்டருக்கும் அதிகமான நிலப்பரப்பை கடல் உள்வாங்கியுள்ளது. அத்துடன், பல தென்னை மரங்களும் கடலரிப்பினால் அழிந்துவிட்டதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டினர். கடலரிப்பைத் தடுப்பதற்காக கடலிலும் கரையிலும் பாரிய கற்கள் போடப்பட்டுள்ளதால், படகுகள் பயணிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அத்துடன், மீன்பிடிக்காக வலைகளைப் பயன்படுத்துவதிலும் மீனவர்கள் சவால்களை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில், ஒலுவில் துறைமுகம் அமைக்கப்பட்டு பல வருடங்களாகியும் வர்த்தகத் துறைமுகம் இதுவரை தொழிற்படவில்லை.