மூளைச்சலவை செய்யப்பட்டு தீவிரவாதியானார் ஓசாமா

மூளைச்சலவை செய்யப்பட்டு தீவிரவாதியானார் ஓசாமா: மௌனம் கலைத்த தாயார்

by Bella Dalima 04-08-2018 | 4:14 PM
அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் மூளைச்சலவைக்கு உட்படுத்தப்பட்டு தீவிரவாதியாக்கப்பட்டார் என மௌனம் கலைத்திருக்கிறார் பின்லேடனின் தாயார் அலியா கானேம். அமெரிக்காவில் நடத்தப்பட்ட இரட்டை கோபுரத்தாக்குதலில் அந்நாட்டு அரசால் தேடப்படும் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார் அல்கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன். இதன்பின்னர் பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்க வீரர்கள் 2011 மே 2 ஆம் திகதி சுட்டுக்கொன்றனர். ஒசாமா பின்லேடன் இறந்து 7 வருடங்களுக்குப் பிறகு அவருடைய தாயார் அலியா கானேம் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேர்காணல் ஒன்றை அளித்திருக்கிறார். தற்போது சௌவுதியில் ஜெட்டா நகரில் தனது இரண்டு மகன்களுடன் வசித்துவருகிறார் அலியா.
எனது வாழ்க்கை மிகக் கடினமாகிவிட்டது. ஓசாமா பின்லேடன் என்னிடமிருந்து வெகு தொலைவிற்கு சென்றுவிட்டார். அவர் மிகவும் தன்னம்பிக்கை மிக்க குழந்தையாக இருந்தார். அவர் என் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். ஒசாமா தனது 20 ஆவது வயதில் கின் அபுலாசிஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படித்துக் கொண்டிருக்கும்போது, மூளைச்சலவைக்கு உட்படுத்தப்பட்டார். அதிலிருந்து அவர் மிகவும் வித்தியாசமான நபராகக் காணப்பட்டார். அந்த பல்கலைக்கழகமும் அங்கிருந்தவர்களும் ஒசாமாவை மாற்றினார்கள். நான் அவர்களிடமிருந்து விலகி இருக்குமாறு கூறினேன். ஆனால், அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில் அவர் அதனை விரும்பினார். இரட்டை கோபுரத்தாக்குதலுக்கு என் மகன் தான் காரணம் என்று தெரிந்ததும் எங்களுக்கு மிகவும் அவமானமாக இருந்தது
என கூறியுள்ளார் அலியா கானேம்.

ஏனைய செய்திகள்