பெட்ரிசியாவுடன் சம்பந்தன் கலந்துரையாடல்

பொதுநலவாய செயலாளர் நாயகத்துடன் சம்பந்தன் கலந்துரையாடல்

by Staff Writer 03-08-2018 | 7:49 PM
Colombo (News 1st) இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பொதுநலவாய செயலாளர் நாயகம் பெட்ரிசியா ஸ்காட்லாண்ட் தமிழ் தேசிய‍க் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை இன்று சந்தித்துக் கலந்துரையாடினார். பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று இந்த சந்திப்பு இடம்பெற்றது. ஆயுதப் போராட்டம் முற்றுப்பெற்றிருந்தாலும் முழுமையான அமைதியும் சமாதானமும் மக்களிடையே ஏற்படவில்லை என இதன் போது இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச மட்டத்திலும் நாட்டு மக்களுக்கும் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என பலத்த எதிர்பார்ப்புகள் நிலவியதாகவும் அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் சிறுபான்மை மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு திருப்திகரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனவும் இதன்போது இரா.சம்பந்தன் பொதுநலவாய செயலாளர் நாயகத்திடம் கூறியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராந்தியங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் வகையில், அரசாங்க கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு புதிய அரசியல் யாப்பு, உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டுதல், நஷ்டஈடு, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான விசாரணைகள், படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணி விடுவிப்பு, மிக கடுமையான பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் விடுதலை ஆகியன மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்ட எதிர்பார்ப்புகளில் சில என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புதிய அரசியல் யாப்பினை உருவாக்கும் பிரேரணையானது பாராளுமன்றில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாகவும், ஒரு சில அரசியல் காரணங்களின் நிமித்தம் இதனை முன்னெடுத்து செல்வதில் அரசாங்கத்தரப்பில் தாமதங்கள் காணப்படுவதாகவும் இரா. சம்பந்தன், பெட்ரிசியா ஸ்காட்லாண்டிடம் கூறியுள்ளார். கடும்போக்காளர்களின் நடவடிக்கைகளுக்கு அஞ்சி இவற்றினை கைவிட முடியாது எனவும் இரா.சம்பந்தன் கூறியுள்ளார். இலங்கையில் ஜனநாயக மேம்பாடு, சட்ட ஒழுங்கு, நல்லாட்சி மற்றும் சூழல்மாசடைதலை தவிர்த்தல் உள்ளடங்கலான பல விடயங்களில் பொதுநலவாய அமைப்பின் பங்களிப்பு தொடர்பில் பெட்ரிசியா ஸ்காட்லாண்ட் , எதிர்க்கட்சித் தலைவரை தௌிவுபடுத்தியுள்ளார். புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்திற்கு பொதுநலவாய அமைப்பு தொடர்ச்சியான பங்களிப்பினை வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார். இலங்கையில் நிரந்தரமான அமைதியையும் சமாதானத்தினையும் ஏற்படுத்த பொதுநலவாய அமைப்பு உள்ளிட்ட சர்வதேச சமூகத்திற்கும் பங்குண்டு என இதன்போது இரா.சம்பந்தன் வலியுறுத்தியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.