அலுவலகம் செல்வதைத் தவிர்த்த கிராம உத்தியோகத்தர்கள்

யாழில் அலுவலகம் செல்வதைத் தவிர்த்த கிராம உத்தியோகத்தர்கள்

by Staff Writer 02-08-2018 | 10:19 PM
Colombo (News 1st)  யாழ். குடாநாட்டின் கிராம உத்தியோகத்தர்கள் அனைவரும் இன்று தமது அலுவலகங்களுக்கு செல்வதைத் தவிர்த்தனர். கிராம உத்தியோகத்தர் ஒருவர் வாள் முனையில் அச்சுறுத்தப்பட்டு, அவரின் அலுவலகம் சேதமாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கிராம உத்தியோகத்தர்கள் அலுவலகம் செல்வதை பகிஷ்கரித்தனர். இதனால் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களில் சேவையைப் பெறச் சென்ற மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர். யாழ். உடுவில், சண்டிலிப்பாய், கோப்பாய் , சங்கானை, வலிகாமம் வடக்கு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள கிராம உத்தியோகத்தர் அலுவலகங்கள் இன்று மூடப்பட்டிருந்தன. கிராம உத்தியோகத்தர்கள் இன்று தமது உத்தியோகப்பூர்வ அலுவலகம் செல்வதை தவிர்த்தமை தொடர்பில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனிடம் வினவுவதற்கு நியூஸ்ஃபெஸ்ட் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. கடந்த திங்கட்கிழமை (30) வண்ணார்ப்பண்ணை வடக்கு பகுதியில் கிராம உத்தியோகத்தர் வாள் முனையில் அச்சுறுத்தப்பட்டு, அவரது அலுலகம் சேதமாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.