துறைமுகத் திட்டத்தின் பரப்பைக் குறைத்த மியன்மார்

சீனாவின் கடன் உதவியில் செயற்படுத்தப்படும் துறைமுகத் திட்டத்தின் பரப்பைக் குறைத்த மியன்மார்

by Staff Writer 02-08-2018 | 9:37 PM
Colombo (News 1st) கடன் பிரச்சினை ஏற்படலாம் என்ற அச்சத்தில் சீனாவின் கடன் உதவியில் செயற்படுத்த திட்டமிடப்பட்டிருந்த துறைமுக திட்டத்தின் பரப்பை குறைப்பதற்கு மியன்மார் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். சீனாவின் நிதி உதவியின் கீழ் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் முன்னெடுத்த திட்டங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளமையினால் மியன்மார் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. சீனாவின் கடன் உதவியில், மியன்மாரின் ரெக்கின் மாநிலத்தின் கியுக் பீயு துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு மியன்மார் அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. ஆரம்ப திட்டத்திற்கு ஏற்ப இந்த திட்டத்தின் செலவு 7.3 பில்லியன் அமெரிக்க டொலராகும். எனினும், திட்டத்தின் பரப்பை குறைத்தமையினால் செலவு 1.3 பில்லியனாகக் குறைவடைந்துள்ளதாக மியன்மார் பிரதி நிதி அமைச்சர் செட் அவுன்ங் தெரிவித்துள்ளார். சீன அரசாங்கத்திற்கு சொந்தமான CITIC குழுமம் மூலம் நிர்மாணப் பணிகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், இலங்கை எதிர்நோக்கியுள்ள நிலைமையினால், தமது நாடும் கடன் சுமையில் சிக்க வேண்டி ஏற்படும் என்பதால் மியன்மார் இது குறித்து அதிகக்கவனம் செலுத்தியுள்ளதாக ரொய்டர் செய்தி வௌியிட்டுள்ளது. துறைமுகத் திட்டத்திற்கு கடன் பெறுவதற்காக மியன்மார் இறையாண்மை உத்தரவாதம் வழங்குவதில்லையென மியன்மாரின் பிரதி நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.