வெளிநாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பில்லை

இம்ரான் கான் பதவியேற்பு விழாவிற்கு வெளிநாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பில்லை

by Bella Dalima 02-08-2018 | 4:35 PM
Colombo (News 1st)  பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்கும் விழாவிற்கு வெளிநாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்க இம்ரான் கான் முன்பு திட்டமிட்டிருந்த நிலையில், அந்த முடிவைக் கைவிட்டுள்ளார். பாகிஸ்தானில் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான PTI கட்சி, அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால், ஆட்சியமைக்க போதுமான இடங்களை அந்தக் கட்சியால் பெற முடியவில்லை. இந்த நிலையில், மற்ற கட்சிகளின் உதவியுடன் ஆட்சியமைக்க இம்ரான் கான் முடிவு செய்துள்ளார். ஆகஸ்ட் 11 ஆம் திகதி பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. பதவியேற்பு விழாவிற்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் அழைக்க இம்ரான் கான் முடிவு செய்தார். சார்க் நாடுகளின் தலைவர்களையும், இந்தியப் பிரதமர் மோடியையும் பதவியேற்பு விழாவிற்கு அழைக்க அவர் விரும்பினார். எனினும், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் அனுமதி தேவை என்பதால், அது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. வெளிநாட்டுத் தலைவர்களின் வருகைக்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் ஒப்புதல் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, பதவியேற்பு விழாவை உள்ளூர் தலைவர்களை மட்டும் அழைத்து எளிமையாக நடத்த PTI கட்சி முடிவு செய்துள்ளது. இம்ரான் கான், இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களான சுனில் கவாஸ்கர், கபில்தேவ், நவஜோத்சிங் சித்து, இந்தி நடிகர் அமீர்கான் ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.