அர்ஜூன், கசுனுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

அர்ஜூன் அலோசியஸ், கசுன் பாலிசேனவிற்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

by Staff Writer 02-08-2018 | 5:45 PM
அர்ஜூன் அலோசியஸ், கசுன் பாலிசேனவிற்கு தொடர்ந்தும் விளக்கமறியல் பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன ஆகியோர் எதிர்வரும் 09 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டபோது விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் முன்னாள் அதிகாரிகளான நுவன் சல்காது மற்றும் சச்சித்ர தேவதந்திரி ஆகியோரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பிணை வழங்கப்பட்டபோதிலும், பிணை நிபந்தனைகளின் பிரகாரம் கடவுச்சீட்டுக்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்கத் தவறியதால் இவர்களை விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது நுவன் சல்காது மற்றும் சச்சித்ர தேவதந்திரி ஆகியோர் இன்று காலை குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். மத்திய வங்கி முறிகள் மோசடி இடம்பெற்ற காலத்தில் பதிவான தொலைபேசி உரையாடல்களை அழித்து, திரிபுபடுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்கள் இன்று கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் தலா 3 இலட்சம் ரூபா சரீரப் பிணை மற்றும் நிபந்தனைகளுடன் விடுவிப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த சந்தேகநபர்கள் இருவரையும் அரச சாட்சிகளாக அழைக்க எதிர்பார்ப்பதாக சட்ட மா அதிபர் சார்பில் முன்னிலையாகியிருந்த சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஹரிப்பிரியா ஜயசுந்தர மன்றில் அறிவித்துள்ளார்.