இலங்கை மாணவர்களின் விசாக்களில் மோசடி

நியூஸிலாந்தில் கல்விகற்கும் இலங்கை மாணவர்களின் விசாக்களில் மோசடி

by Staff Writer 01-08-2018 | 8:49 AM
நியூஸிலாந்தில் கல்வி கற்கும் நூற்றுக்கணக்கான இலங்கை மாணவர்களின் விசாக்களில் இடம்பெற்றுள்ள மோசடி தொடர்பில் 'ரேடியோ நியூஸிலன்ட்' (RNZ) வெளிக்கொணர்ந்துள்ளது. மும்பையிலுள்ள நியூஸிலாந்து குடிவரவு அலுவலகத்தினால் இலங்கைக்கான விசா விண்ணப்பங்கள் கையாளப்பட்டு வருகின்ற நிலையில், இந்த வருடத்தின் ஆரம்பத்தில் குறித்த விசா மோசடி விவகாரம் தொடர்பில் இரகசியத் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. இலங்கையை மையமாகக் கொண்டு இயங்கும் நிதி நிறுவனம் ஒன்று போலி விண்ணப்பங்களைத் தயாரித்து மாணவர்களுக்கு வழங்கி அவர்களுக்கு விசாவைப் பெற்றுக்கொடுப்பதற்காக 15,000 அமெரிக்க டொலர் பணத்தை வங்கிக்கணக்கில் வைப்பிலிட்டுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. போலி ஆவணங்களைக் கொண்டுள்ள மாணவர்கள் தொடர்பில் இதுவரை விசாரணைகளில் கண்டறியப்படவில்லை என நியூஸிலாந்தின் குடிவரவுத்துறை அமைச்சர் லெய்ன் லீஸ் கலோவே (Iain Lees-Galloway) தெரிவித்துள்ளார். மோசடி இடம்பெற்றமை கண்டறியப்பட்டபோது 88 விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்ததுடன், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் 83 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மும்பை அலுவலகத்தினூடாக அனுப்பப்பட்டுள்ள இலங்கையின் 895 விண்ணப்பங்களிலும் குறித்த நிதி நிறுவனத்தினூடாக மோசடி இடம்பெற்றுள்ளதா என்பது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நியூஸிலாந்தின் குடிவரவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மோசடி இடம்பெற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விசாக்களைத் தவிர ஏனைய விசாக்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். குறித்த அறிக்கையின் பிராகாரம் கடந்த காலங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இலங்கை மாணவர்களின் விசாக்கள் ஏன் பரிசீலனைக்கு உட்படுத்தப்படவில்லை என நியூஸிலாந்தின் தேசிய கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. இந்த விவகாரத்தினால் நியூஸிலாந்தின் பெருமளவிலான கல்வி வழங்கும் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அந்தந்த கல்வி நிறுவனங்களின் எதிர்கால மாணவர்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.