by Staff Writer 01-08-2018 | 4:51 PM
Colombo (News 1st) ஜனாதிபதி செயலணியின் முன்னாள் தலைமை அதிகாரி காமினி செனரத் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளை எதிர்வரும் 24 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மூவரடங்கிய கொழும்பு விசேட மேல்நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா பணத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்திமை உள்ளிட்ட 24 குற்றச்சாட்டுகள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிற்கு அமைய, இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மூவரடங்கிய கொழும்பு விசேட மேல்நீதிமன்றத்தில் சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட முதலாவது வழக்கு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
2014 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கொழும்பில் வைத்து குறித்த பணத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமையானது, பொதுச்சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றம் என தெரிவித்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் கீழ் காமினி செனரத், பியதாச குடாபாலகே, நீல் பண்டார ஹப்புஹின்ன மற்றும் கே.லசந்த பண்டார ஆகியோருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கு 63 சாட்சியாளர்களுடன் 92 ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக சட்ட மா அதிபர், மூவரடங்கிய கொழும்பு விசேட மேல்நீதிமன்றத்திற்கு இன்று அறிவித்துள்ளார்.